இனி வேலூர் சரகத்திற்குட்பட்ட பொதுமக்கள் கொள்ளையர்களிடம் இருந்து வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள புதிய இணையதள சேவையை   வேலூர் மாவட்ட காவல் துறை அறிமுகம் செய்துள்ளது .

 

பொதுமக்கள் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர்  செல்லும்போது இணையதளம் வாயிலாகத்  தகவல் தெரிவித்தால் போதும் அவர்கள் வீடு திரும்பும் வரை உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் புதிய திட்டத்தை  வேலூர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் அறிமுகப்படுத்தியுள்ளார்  .

 

வேலூர் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்றால், அதுகுறித்து அருகேயுள்ள காவல்  நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்கும் பொதுமக்களின் வீடுகளை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் சம்மந்தப்பட்ட வீடுகளைக்  கண்காணித்து வந்தனர் .

 

 





 

ஆனால் பொதுமக்கள் பலர் காவல் நிலையம் சென்று தகவல் அளிப்பதில் தயக்கம் காட்டி வந்தனர் இதனால் அவர்கள் வெளியூர் செல்லும் தகவல்களைச் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்குத் தெரிவிக்காமல் விட்டு விடுகின்றனர் . இதனால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றது . 

 

பொதுமக்களின் இந்த  தயக்கத்தை போக்கவும், அவர்கள் தகவல்கள் அளிப்பதை எளிதாக்கும் வகையில் வேலூர்  காவல்துறை உட்கோட்டத்துக்கு உட்பட்ட 10 காவல் நிலையங்களில் இணையத்தளம் மூலமாக தகவல் அளிக்கும் புதிய நடைமுறையை வேலூர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் அறிமுகம் செய்துள்ளார்.

 



 

அதன்படி சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் தங்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போதும் மற்றும் வீட்டில் முதியவர்களை மட்டும் தனியாக விட்டுவிட்டு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள செல்லும் போதும் , சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு இணையத்தளம் வாயிலாகவே தங்கள் வீட்டிற்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதைத் தெரியப் படுத்தலாம் .

 

இதுகுறித்து உதவி காவல்துறை கண்காணிப்பாளார்  கூறுகையில், வேலூர் வடக்கு மற்றும் தெற்கு, தாலுகா, சத்துவாச்சாரி, பாகாயம், அரியூர், விரிஞ்சிபுரம், அணைக்கட்டு, வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றால் கைப்பேசியில்  https://t.co/FIFpYZNnvr?amp=1 என்ற இணையதள முகவரி மூலம் தகவல் அளிக்கலாம். பெயர், வீட்டின் முகவரி, கைப்பேசி எண், வீட்டைப் பூட்டி விட்டு செல்லும் நாள், திரும்பி வரும்நாள், அருகேயுள்ள காவல் நிலையம் ஆகிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

 



 

இந்த விவரங்கள் உதவி காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டு, அவை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்படும். அதன்பேரில் பூட்டியிருக்கும் வீடு இருக்கும் பகுதிக்கு போலீசார் சென்று இரவு, பகலாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

 



 

இதன்மூலம் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவத்தைத் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றால் புதிய நடைமுறையைப் பின்பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் .

 

உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானின் இந்த அறிவிப்பை வேலூர் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் .