நாம் ஒவ்வொருவரும் பள்ளியில் படித்துள்ளோம். அந்த பள்ளி பருவங்களில் மனதுக்கு பிடித்தமான ஆசிரியர்கள் இருப்பார்கள், மற்றும் மனதுக்கு பிடிக்காத ஆசிரியர்களும் இருப்பார்கள். நாம் பள்ளியை விட்டு விலகும் பொழுதும் , வகுப்பு மாறிச்செல்லும் பொழுதும் நமது உயிர் நண்பர்களை விட்டு பிரியும் சமயம் எவ்வளவு வேதனை இருக்குமோ அதேபோன்ற வேதனை சில ஆசிரியர்கள் நம்மை விட்டு மற்ற பள்ளிக்க பிரியும்போதும் ஏற்படும். நாம் எவ்வளவுதான் பள்ளி பருவங்களில் கேலி கிண்டல் செய்து இருப்போம் ஆசிரியர்களின் அருமையை நம்மில் பலர் பள்ளி பருவத்தை கடந்த பின்னர் தான் உணர்ந்திருப்போம். அதன் வெளிபாட்டை தான் நாம் ஆசிரியர் தினத்தன்று பலர் வைக்கும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்களில் காணலாம்.
இந்தவகையில் தான் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு புனிதா பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), கார்த்திகேயன் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்), ஜெயந்தி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), தனலஷ்மி பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), சுகந்தி பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), ஆகிய ஆசிரியர்கள் துறை சார்ந்த பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக புனிதா மற்றும் கார்த்திகேயனும், மற்றவர்கள் 10 வருடத்திற்கு மேலாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்
இந்நிலையில் கார்த்திகேயன் என்ற ஆசிரியர் பென்னாத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், தனலட்சுமி என்ற ஆசிரியர் வேலப்பாடி மேல்நிலைப்பள்ளிக்கும், புனிதா என்ற ஆசிரியர் காங்கேயநல்லூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், ஜெயந்தி என்ற ஆசிரியர் லத்தேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் சுகந்தி என்ற ஆசிரியர் ஆற்காடு தோப்புக்காடு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறையிலிருந்து நேற்றுமுன்தினம் பணியிட மாற்றத்திற்கான உத்தரவு வந்துள்ளது.இதனையடுத்து நேற்று நண்பகல் மதியம் ஒரு மணி அளவில் இவர்கள் பள்ளியைவிட்டு சென்றுள்ளனர்.
அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளியே வரும்போழுது ஆசிரியர்களிடம் படித்த மாணவிகள், ஆசிரியர்கள் வெளியே செல்லாதவாறு மடக்கிப் பிடித்து, ஆசிரியர்களை கட்டி அழுது புரண்டு தங்களின் சோகத்தை வெளிபடுத்தியுள்ளனர். மேலும் அவர்களை தங்கள் பள்ளியிலேயே இருக்குமாறும் மாணவிகள் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர்கள் மாணவிகளை நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றும் அறிவுரை கூறினார், மேலும் ஆசிரியர்களும் மாணவர்களை கட்டி அணைத்தபடியே அழுதுகொண்டே விடைபெற்றனர். மேலும் இவர்களுக்கு சக ஆசிரியர்கள் ஊழியர்கள் அலுவலர்கள் விடை கொடுத்து அனுப்பி வைத்தனர். மாணவிகள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியை ஏர்ப்படுத்தியது.