ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை மீட்கச் சென்ற நபர்களில், லாரி மோதி இரண்டு ஓட்டுநர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆட்டோ
வேலூர் அருகே உள்ள பொய்கை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று (அக்.01) நள்ளிரவு மாதனூரில் இருந்து ஆம்பூர் நோக்கி ஆட்டோ ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது உடைய ராஜபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஆட்டோவானது நிலை தடுமாறி, சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது.
காப்பாற்ற விரைந்த 5 பேர்
அந்த நேரத்தில் குடியாத்தம் அருகே உள்ள மேல்மாயிலைச் சேர்ந்த சரவணன் (வயது 38) எனும் ஓட்டுநர் லாரியில் கோழி லோடு ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி சென்றுள்ளார். அவருடன் க்ளீனராக பணிபுரியும் சுந்தரமூர்த்தி (வயது 38) என்பவரும் இருந்துள்ளார்.
அப்போது எதிர் திசையில் ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி அரிசி லாரி ஒன்றும் வந்துள்ளது அதில் ஓட்டுநர் ராஜா (வயது 50) க்ளீனராக பணிபுரியும் கிருஷ்ணன் (33)ஆகியோரும் வந்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் தாங்கள் வந்த லாரிகளை அப்படியே நிறுத்திவிட்டு ஆட்டோவில் சிக்கிய வினோத்குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில் பைக்கில் அந்த வழியே சீனிவாசன் எனும் இளைஞரும் அவர்களுடன் சேர்ந்து ஆட்டோவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உதவச் சென்றவர்கள் மீது மோதிய லாரி
5 பேரும் சேர்ந்து கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை தூக்க முயற்சித்து வந்த நிலையில், வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வேகமாகச் சென்ற லாரி ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர்கள் சரவணன், ராஜா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த ஆட்டோவில் இருந்த வினோத் குமார், க்ளீனர்கள், பைக்கில் வந்த இளைஞர் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் பலி, 4 பேர் சிகிச்சை
தொடர்ந்து ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பலியான இரண்டு ஓட்டுநர்களின் உடல்களை முன்னதாக காவல் துறையினர் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் சிக்கியவரை மீட்கச் சென்றவர்கள் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.