திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (47). இவர் மேக்களூர் அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து  இருச்சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சோமாசிபாடி அருகில் செல்லும் போது இருச்சக்கர வாகனம் மீது  திருவண்ணாமலை நோக்கி வந்த மற்றொரு இருச்சக்கர வாகனம் மோதியது. இதில் ராஜேந்திரனுக்கும், எதிரே இருச்சக்கர வாகனத்தில் வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ராஜேந்திரனை, அந்த வழியாக வந்த காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்துள்ளனர். 


 




இந்நிலையில் காரில் வந்தவர்களுக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் ராஜேந்திரனின் உடலை காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். காரை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த ராஜேந்திரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.அப்போது பிரேத பரிசோதனை அறை அருகில் காரில் ராஜேந்திரன் உடல் இருந்ததை கண்ட அவர்கள் காரில் வந்தவர்களிடம் முன்விரோதம் காரணமாக வேண்டும் என்றே கால தாமதமாக கொண்டு வந்து கொன்றுவிட்டதாக கூறி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர். காரில் வந்தவர்களை இறந்தவர்களின் உறவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


 




மேலும் அங்கு வந்த காவல்துறையினர்  அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே ராஜேந்திரனின் உடலுடன் காரை மருத்துவமனைக்கு முன்பு எடுத்து வந்து நெடுஞ்சாலையில் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராஜேந்திரன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறினர். எழுத்து பூர்வமாக புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


அச்சுறுத்தும் கொரோனா.. 4-வது டோஸ் தடுப்பூசி.. பரிந்துரைப்பது யார்? எதற்காக? விவரம் இதோ..