திங்கள் கிழமை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கொரோனா நிலைமை குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.


கூட்டம் குறித்து பேசிய அமைச்சர், 


உலக அளவில் குறிப்பாக சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் அதிகரித்து வரும் பாதிப்புகளுக்கு மத்தியில் கோவிட் -19 கண்காணிப்பை முடுக்கிவிடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.


ஆனால், உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலைமை சற்று வேறுபட்டுள்ளது. கடந்த 7 நாள் கால அளவில் பதிவு செய்யப்பட்ட புதிதாக தொற்று பாதித்தவர்களின் சராசரி எண்ணிக்கை டிசம்பர் 1 அன்று 300-க்கும் குறைவாக இருந்தது. மேலும் டிசம்பர் 25 அன்று 163 ஆக படிப்படியாக குறைந்துள்ளது.


4-வது டோஸ்:


கூட்டத்தில் பங்கேற்ற டாக்டர் ஜெயலால் தெரிவிக்கையில்,


மருத்துவம் மற்றும் முன்னணி ஊழியர்களுக்கான கடைசி டோஸ் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு செலுத்தப்பட்டது. இவ்வளவு நீண்ட இடைவெளி நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். நோயாளிகளை நிர்வகிக்க வேண்டிய மற்றும் அதிக ஆபத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நான்காவது டோஸ் ( precautionary dose ) அளவை பரிசீலிக்குமாறு நாங்கள் அமைச்சரை வலியுறுத்தியுள்ளோம் என்று டாக்டர் ஜெயலால் கூறினார்.


மேலும், அதிகபட்ச மக்கள் 4வது டோஸ் அளவுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்யுமாறும் நாங்கள் அமைச்சரை வலியுறுத்தியுள்ளோம். இது குறித்து அச்சம் கொள்ள தேவை இல்லை, ஆனால் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்" என்று ஐ.எம்.ஏவின் தேசியத் தலைவர் டாக்டர் சகஜானந்த் பிரசாத் சிங் கூறினார்.


"தவறான தகவலை பரப்ப வேண்டாம்"


கூட்டத்தில், தொற்று குறித்தான தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.


மேலும், விழிப்புடன் இருப்பது, முக கவசம் அணிவது உட்பட கோவிட் தடுப்பு நடவடிக்கை பின்பற்றுவதும் முக்கியம் என்றாலும், தவறான தகவல் பரிமாற்றத்தை தடுப்பதும், கோவிட் -19 குறித்த உண்மையான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்வதும் சமமான முக்கியம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது


மாநிலங்களுக்கு கடிதம் 


"ஜப்பான், அமெரிக்கா, கொரியா குடியரசு, பிரேசில் மற்றும் சீனாவில் வழக்குகள் திடீரென அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா தொற்று ​​மாறுபாடுகளை கண்காணிக்க, பரிசோதனை மாதிரிகளின் முழு மரபணு வரிசை முறையையும் கண்காணிப்பது அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனிடமிருந்து அனைத்து மாநிலங்களுக்கும், சில தினங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  "இத்தகைய நடைமுறை, நாட்டில் ஏற்கனவே இருக்கும் உருமாறிய கொரோனா வைரஸிலிருந்து, மாறுபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிவதற்கு உதவும், மேலும் அதற்கு தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது உதவும்" என்று ராஜேஷ் பூஷன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 


Also Read: Coronavirus: சீனாவிலிருந்து மதுரை வந்த தாய்-மகள் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..