திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த  ஆவணியாபுரம்  ஊராட்சிக்குட்பட்ட மதுரா சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் இறந்தவர்களின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சரியான பாதை இல்லாததால் ஆற்றைக் கடந்து சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் தமிழ் நாட்டின் வடகிழக்கு பருவமழை  காரணமாக லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 




இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்ட முழுவதும் தொடர் மழையின் காரணமாக அணைகள், ஏரிகள் போன்றவைகள் நிரம்பியுள்ளது. இதனால்  மழை நீர்  நிரம்பி வழிந்தோடுவதால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் சடலத்தை  சுமந்து சென்று சடலத்துடன் கூடிய  பாடையை கயிறு கட்டி தண்ணிர்  சூழ்ந்துள்ள பாதை வழியாக அடுத்த  கரைக்கு  இழுத்து கொண்டு   அடக்கம் செய்யும்  நிலைமைக்கு கிராம மக்கள்  ஆளாகி  வருகின்றனர். சுடுகாடு பாதை முழுவதுமாக ஆற்று  சூழப்பட்டு சடலத்தை கயிறு கட்டி தண்ணிரில் இழுத்து செல்லும்  பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் ஒன்றுகூடி, மாவட்ட நிர்வாகத்திடமும், அரசாங்கத்திடமும் தண்ணிரால் சூழப்பட்ட சுடுகாட்டு பாதையில் பாலம் ஒன்றை கட்டி தருமாறு  கோரிக்கை  வைத்துள்ளனர். 



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களுடைய கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். அதில் இரண்டு அல்லது மூன்று சமூக உள்ளோம் அந்த அந்த சமூகத்தினருக்கு என தனி சுடுகாடுகள் எங்கள் கிராமத்தில் உள்ளது. இதில் எங்கள் சமூகத்திற்கு என ஒரு சுடுகாடு உள்ளது. அந்த சுடுகாடு ஆற்றங்கரையின் அடுத்தபகுதியில் உள்ளது. யாராவது இறந்தால் நாங்கள் ஆற்றை கடந்து சென்றுதான் அடக்கம் செய்து வருகிறோம். எங்களுக்கு பாலம் வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரையில் எங்களுக்கு பாலம் அமைத்து தரவில்லை. மற்ற நாட்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருக்கும் கடந்து சென்று விடுவோம். தற்போது தொடர் மழைக்காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இதனால் இறந்தவரின் உடலை எப்படி எடுத்து செல்வது என்று தெரியாமல் ஆற்றின் குறுக்கே கயிற்றை கட்டி பாடையை அதன் மூலம்  நீச்சல் அடித்துக்கொண்டு இழத்து சென்று அடக்கம் செய்துள்ளோம். மேலும் எங்கள் கிராமத்தில் இறப்பவர்களின் உடல்களை எடுத்து சென்று அடக்கம் செய்ய தற்போது மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள்  கிராமத்தில் பாலம் அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.