திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர மன்ற சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்து தீவிரமாக ஆலோசினை நடைபெற்றது. நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் பேசுகையில், பல பகுதிகளில் பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய் சாலை, குடிநீர் மின்மோட்டார்கள் பழுதடைந்ததை சரி செய்யவில்லை என்றும் அதிகாரிகள் இதுகுறித்து நேரடியாக எந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு வைத்தார். ஒட்டுமொத்த குரலாக தூய்மை பணியாளர்கள் பொது சுகாதார அமைப்பினர் எந்த வார்டுகளிலும் எவ்வித பணிகளையும் செய்யவில்லை என ஒட்டுமொத்த குற்றச்சாட்டு வைத்தனர். இதனால் திமுக நகர மன்ற உறுப்பினர் உங்களுடைய வார்டில் மட்டும் உள்ள பிரச்னைகளை மட்டும் பேச வேண்டும், எண்ணுடைய வார்டு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிமுக நகர மன்ற உறுப்பினர் அமைச்சர் திருவண்ணாமலையில் உள்ள நகராட்சிகள் அனைத்து ஒன்று தான் என்று கூறினார். அதனால் தான் நான் நான் பேசினேன் என்று தெரிவித்தார். 


 




இதுகுறித்து பேசிய நகராட்சி ஆணையாளர் முருகேசன், பொது சுகாதார அமைப்பினர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் என அனைவருக்கும் நான் இறுதி எச்சரிக்கை செய்வதாகவும், இனிமேல் நகராட்சியின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை சரிவர செய்யவில்லை என்றால் அனைவரும் உரிய அனுமதி பெற்று பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக கூட்டத்தில் தூய்மைப் பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்ட பொழுது அதிமுக திமுக நகர மன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இதில் தலையிட்டு பேசிய நகர மன்ற தலைவர் உடனடியாக தூய்மை பணிகள் அனைத்து வார்டுகளிலும் முறையாக செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் வாக்குவாதத்தை கைவிட்டனர்.


 




இந்த திடீர் வாக்குவாதத்தால் நகர மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் கூறுகையில், “39 வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் அனைத்தும் நடைபெற்றும். வார்டுகளில் எந்த குறைகள் இருந்தாலும் உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தால் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மற்றும் கால்வாய் பணிகள் தரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.


தொடர்ந்து வார்டு உறுப்பினர் தாங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான காந்தி நகரில் உள்ள காலியிடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரைத்தளத்தில் காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல் தளத்தில் 121 பூக்கடைகளும் என 249 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூபாய்30 கோடியே 10 லட்சத்தில் கட்டுவதற்கு திட்ட அறிக்கை என அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.