திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த இலுப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் வயது(28). இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார் . இவரும் வேட்டவலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளம்பெண் ஒருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாத கூறப்படுகிறது. ஜாதியை காரணம் காட்டி, பிரசாந்த பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் கேட்டவில்லை. இந்நிலையில் பிரசாந்த் மனதை மாற்றிய பெற்றோர், அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர் . இருப்பினும் அவரால் அந்த பெண்ணை மறக்கமுடியவில்லை.
இந்நிலையில் பிரசாந்த் காதலித்ததாக கூறப்படும், இளம்பெண்ணுக்கு அவரது உறவினர்கள் சக்கரதாம்மடையில் ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர் . இதனை அறிந்த பிரசாந்த் கவலையில் இருந்துள்ளார். கவலையாக இருந்த அவரிடம் மனைவி விபரம் கேட்டுள்ளார். அப்போது முன்னாள் காதலியின் திருமண ஏற்பாடு குறித்து பிரசாந்த் கவலை தெரிவித்துள்ளார். உடனே கணவன், மனைவி இருவரும், சம்மந்தப்பட்ட பெண்ணை சந்திக்க நேரில் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இளம் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரை சந்தித்த பிரசாந்தின் மனைவி, ‛உன்னால் தான் என்னுடைய கணவர் என்னுடன் வாழ மறுக்கிறார்,’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சண்டை முற்றியதால் மனைவியை அங்கிருந்து பிரசாந்த் அழைத்துச் சென்றார். வீடு திரும்பிய குடும்பத்தாரிடம் நடந்த சம்பவத்தை முன்னாள் காதலி கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர் ஒருவர், பிரசாந்த் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த பிரசாந்த் , அவரது தந்தை சின்னதுரை , பிரசாந்த்தின் மைத்துனர் ராஜா ஆகியோர் , அந்த நபரை அடித்து உதைத்ததோடு பட்டியலினத்தைச் சேர்ந்த அவரை இனத்தை குறிப்பிட்டு தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் காதலி தரப்பில் வேட்டவலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் , ஆயுதப்படை போலீஸ்காரர் பிரசாந்த் , சின்னதுரை , ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீஸ்காரர் மற்றும் அவருடைய உறவினர்களை காவல்துறையின்ர் கைது செய்ய சென்றபோது தலைமறைவாகிவிட்டனர். பின்னர் தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் மற்றும் உறவினர்களை தேடி வருகின்றனர் . இதற்கிடையில் பெண்ணிடம் தகராறு செய்த போலீஸ்காரர் பிரசாந்த்தை சஸ்பெண்ட் செய்து திருவள்ளுவர் காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் காட்சி போல மனைவி மூலம் மாஜி காதலிக்கு தூது விட நினைத்த பிரசாந்த், அதில் பல்பு வாங்கி, நந்தா சூர்யாவாக வழக்கில் சிக்கியிருக்கிறார்.