2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்முயற்சிகள் மூலம் குடிமக்களிடையே ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட உணவின் ஒரு பகுதியாக சிறுதானிய உணவுகளை இணைப்பதை ஊக்குவித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து நேற்று தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை, வேளாண்மை துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட, நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், பள்ளி மாணவிகள் ஆகியோர் இணைந்து சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய இனிப்புகள் மற்றும் சிறுதானிய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் சார்பாக 15 வகையான சிறுதானிய வகை உணவு பொருட்களையும் மற்றும் 35 வகையான சிறுதானியங்களை காட்சிப்படுத்தப்பட்டது.


 




 


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சிறுதானிய விதைகளை பார்வையிட்டார். அப்போது காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களை ஆட்சியர் சாப்பிடு பார்த்தார் அதில் பள்ளி மாணவர்களின் சிறுதானிய உணவுகளை சாப்பிட்ட ஆட்சியர் சத்தான உணவுகளை நன்றாக உள்ளது. மாணவர்கள் அனைவரும் இது போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் பள்ளிகளில் காலை வழிப்பாட்டு கூட்டத்தின் போது சிறுதானியத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உணவு இடைவேளையின் போது சிறுதானிய சிற்றுண்டிகள் உட்கொள்ளவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவுறுத்தினார்.




தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறுதானிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அப்போது அங்கு குவிந்த அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அங்கு வழங்கப்பட்ட சிறுதானிய உணவுகளை சாப்பிட ஒருவரை ஒருவர் மோதிக்குக்கொண்டு உணவுகளை வாங்கி சென்றனர். ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய  அதிகாரிகளே போட்டி போட்டுக்கொண்டு உணவுகளை வாங்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷ்னி, உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சையத் சுலைமான் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.