திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நெடுங்காவாடி பஞ்சாயத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் விஜய ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபா கூட்டத்திற்கு மேலிட பார்வையாளராக சாலை ஆய்வாளர் ரகுபதி மேற்பார்வையிட்டார். அப்போது கிராம சபா கூட்டத்தில் அதே கிராமத்தை சார்ந்த ஒரு தரப்பைச் சார்ந்த மக்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவிக்கும் சுமார் ஒரு மாதம் முன்பாகவே வாய் தகராறு ஏற்பட்டு பிரச்சனையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அக்டோபர் 2 நாள் நடந்த கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை அதே கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர் கிராம சபை கூட்டத்தை நடத்த கூடாது என்றும் மீறி நீங்கள் நடத்தினால் உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என கூறி கிராம ஊராட்சி மன்ற பெண் தலைவர் விஜயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


 




அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் கீழே தள்ளியதில் பெண் தலைவர் விஜயாவிற்கு காயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பிடிஓ மகாதேவன், துணை பிடிஓ அண்ணாமலை ஆகியோர் நெடுங்காவாடி ஊராட்சிக்கு நேரில் சென்று கிராம சபையில் தகராறு செய்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு துணைத் தலைவர் ராஜேஷ் தலைமையில் கிராம சபா கூட்டம் நடத்தி குடிநீர் பிரச்சனை, சாலை வசதி உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊராட்சி மன்ற பெண் தலைவர் விஜய்யாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு வந்தனர். தண்டராம்பட்டு யூனியனில் 47 கிராம ஊராட்சி கிராமங்கள் உள்ளன.


 




இதில் அதிகமாக பிரச்சனை நடக்கும் ஊராட்சியான நெடுங்காவாடி ஊராட்சியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஊராட்சி மன்ற தலைவருக்கும் மற்றும் எதிர் தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. கிராம சபா கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவியை கீழே தள்ளிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் நெடுங்காவாடி பஞ்சாயத்தில் சிறிது நேரம் பரபரப்பாகவே காணப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டுமென பஞ்சாயத்து தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.