திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் பஞ்சாயத்தில் 6000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு பிரிவை சார்ந்த இளைஞர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தங்கள் கிராமத்தில் உள்ள டீக்கடையில் ஒரு பிரிவினர் டீ கிளாஸ் பதிலாக பிளாஸ்டிக் கப்பில் டீ தருகிறார்கள். துணி அயன் பண்ணுவதற்காக கொடுத்தால் செய்து தர முடியாது, தலை முடி வெட்டும் கடைக்கு சென்றால், முடி வெட்ட முடியாது என கூறுகிறார்கள் என புகார் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மோத்தக்கல் பஞ்சாயத்தில் உள்ள யூனியன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சப் கலெக்டர் (பொறுப்பு) வெற்றிவேல் தலைமையில் இரு தரப்பிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த டீக்கடைகளில் எங்களுக்கு டீ தனியாக பிளாஸ்டிக் கப்பில் வழங்குகிறார்கள். மளிகை கடைகளில் எங்களுக்கு பொருட்கள் வழங்குவதில்லை. எங்கள் பகுதியில் உள்ள கழிவறைகள் தூய்மை செய்வது கிடையாது.
சமுதாயக்கூடம் சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்பொழுது சப் கலெக்டர் உங்கள் பகுதியில் உள்ள கழிவறைகளை உடனடியாக சரி செய்து தரப்படும். சமுதாயக்கூடம் சரி செய்வதற்கு நிதி வந்தவுடன் அதை சரி செய்து தரப்படும் . பஞ்சாயத்தில் யாரும் பேனர் வைக்க கூடாது என பட்டியலின மக்களிடம் தெரிவித்தார். மற்றொரு தரப்பைச் சார்ந்த பொதுமக்கள் கூறுகையில், பட்டியலின மக்கள் டீ குடிக்க வந்தால் டீ குடித்துவிட்டு செல்வது இல்லை. இதிலும் குறிப்பாக இளைஞர்கள் வந்தால் சாலையில் செல்லும் இளம்பெண்களை விசில் அடித்து கூப்பிடுவதும் ஆபாசமாக பேசுவதாக கூறப்படுகிறது. எங்களால் எந்த பிரச்சனையும் வருவது கிடையாது.அந்த தரப்பைச் சார்ந்த நபர்களால் தான் பிரச்சனை வருகிறது என சப் கலெக்டரிடம் தெரிவித்தனர்.
இது குறித்து சப் கலெக்டர் வெற்றி வேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மோத்தக்கல் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் போலீசார், வருவாய்த்துறை இணைந்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். தப்பு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது தாசில்தார் அப்துல் ரகூப், துணை காவல் கண்காணிப்பாளர் முருகன், பாலச்சந்தர், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், தானிப்பாடி சப் இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், மணிமாறன், வருவாய் ஆய்வாளர் யுவராணி, காளிஸ்வரி, சத்தியநாராயணன் விஏஓக்கள் விக்னேஷ் ,ஏழுமலை, குமரகுரு ,அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்