சாத்தனூர் அணையில் குளிக்கச் சென்ற நபரை திருட்டு மீன் பிடிப்பதாக கூறி அடித்துக் கொன்றவர் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா சாத்தனூர், அடுத்த கடப்பன் குட்டை பகுதியில் வசிப்பவர் தேவேந்திரன், இவருடைய தந்தை பழனியின் மரணத்துக்கு நீதி கேட்டு, சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் கடந்த 18-ம் தேதி புகார் அளித்தார். புகார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஓட்டலில் தொழிலாளியாக என்னுடைய தந்தை பழனி பணியாற்றி வந்தார். இவர், எங்களது வீட்டின் அருகே செல்லும் தென்பண்ணை ஆற்றுக்கு குளிக்க கடந்த 15-ம் தேதி சென்றிருந்தார். அப்போது அங்கு, மீன் குத்தகைதாரர் கார்த்தி தலைமையிலான கும்பல் வந்துள்ளது. அவர்கள், மீன் பிடிக்க வந்ததாக கூறி தாக்கியதில், எனது தந்தை மயக்கமடைந்து விழுந்துள்ளார். அவரை, மீன் பிடிக்கும் வாகனத்தில் ஏற்றியவர்கள் கீழே வீசிவிட்டு சென்றனர். அங்கு மீன்வளத் துறை சேர்ந்த அலுவலர் சித்ரா உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.
பின்னர் மயக்கம் தெளிந்ததும், வீட்டுக்கு வந்த எனது தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், வீட்டிலேயே நாட்டு மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி அதிகாலையில் அவர் உயிரிழந்தார். அவரது மூக்கு மற்றும் காதில் ரத்தம் வழிந்திருந்தது. எனது தந்தையை அடித்துக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நீதி வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் மீது சந்தேக மரணம் என்ற பிரிவில் சாத்தனூர்அணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், உயிரிழந்த பழனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் பழனியின் மரணத்துக்கு நீதி கேட்டும், சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின் பிரணவரை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவர்களிடம், துணை காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், பழனியின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றும் வரை, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை பெறமாட்டோம் என தெரிவித்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பழனியின் குடும்பத்தினர் பங்கேற்ற போராட்டம் 2-வது நாளாக நீடித்ததுக்கொண்டுள்ளது. மேலும் இந்த தொடர் ஆர்ப்பாட்டம் பழனியின் சொந்த கிராமமான கடப்பன்குட்டையில் நடைபெற்று வருகிறது.