பஞ்ச பூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இதன் பின்புறத்தில் 2668 அடி உயரம் கொண்ட மலை உள்ளது. இந்த மலையை சிவனாக வழிபடுகின்றனர் பக்தர்கள். சிறப்புமிக்க இந்த கிரிவல பாதையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துறவறம் மேற்கொண்டவர்கள், இங்கு சாதுக்களாக வாழ்ந்து வருகின்றனர். கிரிவலம் முழுவதும் சிவனை மனதார ஏற்றுக்கொண்டு சிவனே கதி என சிவனடியார்கள் கிரிவல பாதை முழுக்க 1000த்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். சாதுக்கள் என்ற போர்வையில், குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் போலி சாமியார்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.


 




 


மேலும், கஞ்சா புகைக்கும் சில சாதுக்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கு குற்றச்செயல் செய்து விட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாதுக்கள் போன்று வேடமிட்டு கிரிவலப் பாதையில் சுற்றி வந்தார். அவரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு சாது ஒருவர் கிரிவலப் பாதையில் உள்ள கோவில் முன்பு அமர்ந்து கொண்டு மதுபாட்டில் வைத்துக்கொண்டு மது அருந்தி கொண்டும் கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றனர்.  இந்நிலையில், கிரிவல பாதையில் தங்கி உள்ள சாதுக்களுக்கு ஐடி கார்டு வழங்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்த நிலையில்  கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு ஐடி கார்டுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.


 




அப்போது சாமியார்களின் கைரேகைகள் எடுக்கப்பட்டு குற்ற பின்னணியில் இருக்கிறார்களா என்று விசாரணை மேற்கொண்டார். மேலும் சாதுக்களிடம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசினார். அப்போது உங்களோடு சாமியார் என்ற பெயரில் போலி சாமியார்கள் கஞ்சா, சாராயம், புகையிலை போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்றாலோ விற்பவர்களை காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ள இலவச அலைபேசி எண் 9159616263 என்ற என்னுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். மேலும் சாதுக்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு இடம் அமைத்து தந்தால் அங்கு தங்குவீர்களா என்று கேட்டறிந்தார். மேலும் சாதுக்களிடம் வேறு ஏதாவது உதவி வேண்டுமா என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கேட்டறிந்தார்.


 




 


ABP நாடு குழுமத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் பேட்டி அளித்தார்;


அப்போது திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கிரிவலப் பாதையில் வாழ்ந்து வரும் சாதுக்களின் கைரேகை மற்றும் புகைப்படத்துடன் சுய விவரங்களை சேரிக்கும் பணி  தொடங்கப்பட்டது. இப்பணி  10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. சாதுக்களிடம் சேகரிக்கப்படும் விவரங்களைக் கொண்டு, ஏற்கெனவே எவரேனும் குற்றப் பின்னணியில் ஈடுபட்டுள்ளார்களா என ஆய்வு செய்து, அதன் பின்னர், அவர்களுக்கு QR Code உடன் கூடிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.