வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (10-ம் தேதி) இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் செய்யாறு, வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. மழையால் ஏரி, குளம் மற்றும் அணைகள் உட்பட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழையின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டன. பிரதான சாலைகள் வெறிச்சோடியது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்படூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு வயது ( 50), இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள அவரது நிலத்திற்கு காலை சுமார் 6 மணியளவில் சென்று அங்குள்ள மாட்டில் பால் கறந்து விட்டு வீட்டுக்கு வந்தார்.


அப்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் அவர் நிலத்தில் உள்ள வீட்டின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக வீட்டின் ஒரு பக்க மண் சுவர் சரிந்து சேட்டு மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த  அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் இருந்து நிலத்திற்கு சென்ற சேட்டு வராததால் அவருடைய மனைவி நிலத்திற்கு வந்து பார்த்தார். அப்போது சேட்டு மீது சுவர் இடிந்து விழுந்தது உயிரிழந்ததை கண்ட மனைவி கதறி அழுதனர். இந்த சத்ததை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இடுபாடுகளில் சிக்கி இருந்த சேட்டுவின் உடலை வெளியே எடுத்தனர்.பின்னர் அங்கு இருந்த நபர்கள் திருவண்ணாமலை தாலூக்கா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.


மேலும், சேட்டுவின் உடலை எடுத்து செல்வதற்கு அமரர் ஊர்திக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் பல மணி நேரம் ஆகியும் அமரர் ஊர்தி வரவில்லை. அப்போது அங்கு வந்த கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன்,சேட்டுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சேட்டின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு தனது சொந்த பணம் 10 ஆயிரம் ரூபாயை கருணை தொகையாக அளித்தார். மேலும் யூனியன் சேர்மன் சுந்தர பாண்டியன் சேட்டுவின் குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாயை வழங்கினார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் விவசாயி உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.