திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் வடக்கு கோபுரம் அருகே உள்ள அம்மணி அம்மன் மடத்தை பாஜக நிர்வாகி ஆக்கிரமித்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுபடி கோவில் நிர்வாகம், வருவாய்த்துறை , காவல்துறை உள்ளிட்டவர்களின் உதவியோடு 18-ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு,  பின்னர் அம்மணி அம்மன் மடத்தை இடிக்கப்பட்டு வந்தது. அப்போது இந்து முன்னணியினர் மண்டபத்தை இடிப்பதை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு 19-ஆம் தேதி திருக்கோவில் நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அம்மணி அம்மன் மடத்தை கொண்டுவர தகர சீட்டினை அமைக்கும் பணியில் ஈடுபட்டடனர். 


 




அப்பொழுது அரசாங்க இடத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த  மாநில பாஜக ஆலய மற்றும் ஆன்மீக மேம்பாட்டு பிரிவில் மாநிலத் துணைத் தலைவர் சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளான செங்கத்தைச் சேர்ந்த அஜித்குமார், கீழ்நாத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தேனிமலை பகுதியைச் சேர்ந்த காளியப்பன், ஏழுமலை, கார்த்தி ஆகியோர் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதாகவும், அவதூறாக பேசியது மட்டுமின்றி அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக அண்ணாமலையார் திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரேசன் கொடுத்த புகாரின் பேரின்  திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


 




 


திருவண்ணாமலை நகர காவல் நிலைய காவல்துறையினர் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது அரசு அதிகாரிகளை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேனிமலையைச் சேர்ந்த காளியப்பன் , ஏழுமலை , கார்த்தி ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். .தலைமறைவாக இருந்த  பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர், அவரது நெருங்கிய ஆதரவாளர்களான வெங்கடேசன் மற்றும் அஜித்குமார் ஆகியோரை திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர்  குணசேகரன் தலைமையிலான தனிப்படை அமைத்து தீவிரமாக கர்நாடக மாநிலம் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் தேடிவந்தனர்.




இந்நிலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக அறை எடுத்து தங்கி இருந்த பாஜக பிரமுகர் சங்கரை தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். திருவண்ணாமலைக்கு அழைத்து வந்த பாஜக நிர்வாகி சங்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி-1 திரு.கவியரசன் முன்னிலையில் ஆஜர் படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி பாஜக பிரமுகருக்கு வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி (05.04.2023) வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட்டார். பாஜக நிர்வாகி திருவண்ணாமலை கிளைச் சிறையில் பலத்த காவல் பாதுகாப்புடன் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 4  பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.