திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் தவணை முறை திட்டத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த தவணை முறைத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான முகவர்களை நியமித்து பொதுமக்களிடமிருந்து 50 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை தவணைத் தொகையாக பெற்று வந்துள்ளது. மேலும் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய தினங்களில் பல்வேறு வகையான கவர்ச்சிகரமான திட்டங்களை தருவதாக கூறி பல கோடி ரூபாய் முதலீடாக பெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து திட்டத்திற்கு உண்டானவற்றை

   வழங்கிய அந்த நிறுவனம் தீபாவளி தினத்திற்கு வழங்க வேண்டிய எந்தவித திட்டத்திற்கு உண்டான தங்கம், வெள்ளி, சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்களையும் வழங்காமல் தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.


 




இந்நிலையில்  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முகவர்கள் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு முகவர் கேட்ட பொழுது விரைவில் தருவதாக கூறி அவர்கள் மீது நம்பிக்கை வருவதற்காக காசோலை மற்றும் பாண்ட் உள்ளிட்டவைகளை அந்நிறுவனம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் நான்கு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு முகவருக்கும், பொதுமக்களுக்கும் பணம் வழங்காததால் முகவர்கள் இல்லத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், முகவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தங்கள் பகுதியில் தாங்கள் இருப்பதாகவும் வேதனையுடன் கூறும் அவர்கள் உடனடியாக முகவர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து தலைமறைவாக உள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்டவர்களை கைது செய்து தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


 




திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட முகவர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஆட்சியர் அலுவலகம்  மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் சில முகவர்கள் ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்த நிலையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியதாகவும் முகவர்கள் தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்த சம்பவம் குறித்து சீக்கிரம் நடவடிக்கை எடுத்து உங்களுடைய பணத்தை திரும்ப பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க கூறுகிறேன் என்றும், இதற்கு மேல் நீங்கள் இதுபோன்ற நிறுவனங்களில் பணத்தை போடாமல் வங்கிகளில் பணத்தை சேமிக்கவும் எனத் தெரிவித்தார் என்று கூறினார்.