கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) திருவனந்தபுரத்தில் உள்ள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான மஸ்கட் விடுதியில் கிறிஸ்துமஸ் விருந்து நடைபெற இருக்கிறது. இந்த விருந்தில் பங்கேற்க அமைச்சர், எம்.எல்.ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை முதலமைச்சர் பினராயி விஜயன் அழைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த டிசம்பர் 14ம் தேதி ராஜ்பவனில் நடந்த கிறிஸ்துமஸ் விருந்துக்கு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநருடன் ஏற்பட்ட மோதலால் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் நிராகரித்தனர்.
பொதுவாக, முதலமைச்சர்கள் தங்கள் கட்சிக்கு தொடர்பான விஷயங்கள் மற்றும் விருந்துகளில் ஆளுநர்களை அழைப்பதில்லை. கடந்த ரம்ஜான் பண்டிகையின்போது இப்தார் விருந்துக்கு ஆளுநர் பினராயி விஜயன் அழைப்புவிடுக்கவில்லை. இருப்பினும், கேரள முன்னாள் ஆளுநர் நீதிபதி பி. சதாசிவம் முதலமைச்சர் நடத்திய விருந்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெறிமுறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான சிக்கல்களை தவிர்ப்பதற்காக ஆளுநர் கட்சிகள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவதில்லை. இந்த காரணத்தையும் முதலமைச்சர் அலுவலகமும் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனாலும், ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து வருகிறது.