திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்துள்ள மலமஞ்சனூர் புதூர் கிராமத்தின் மலை அடிவாரத்தில் பச்சையம்மன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலிருந்து மலையின் மீது 300 அடி உயரத்தில் பாறையின் இடுக்கில் குகையில் சித்தப்படையார் குகை கோவில் அமைந்துள்ளது. இந்த குகை கோவில் பலவருடங்கள் பழமையான கோவில், குகையின் உள்ளே 200 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன், ஈஸ்வரி 2 சிலைகளும், ஈஸ்வரன் தனியாக ஒரு சிலையும், வீரபத்ர சுவாமி ஐந்து சிலையும், விநாயகர், முருகர் என ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் கொண்ட 10 ஐம்பொன் சிலைகள் பாணையில் வைத்து இருந்தனர். இந்த பழமையான இந்த கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆனி மாதம் பௌர்ணமி தினத்தன்று குகை கோவிலுக்கு சென்று மூன்று பானைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பஞ்சலோக சிலைகளை வெளியே எடுத்து வழிபாடுகள் செய்தும் மீண்டும் சிலைகளை அதே குகைக்குள் பானையில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.


 


 




கடைசியாக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று பஞ்சலோக சிலைகளை எடுத்து சிறப்பு வழிபாடுகள் செய்து மீண்டும் அதே குகைக்குள் மூன்று பானைகளில் வைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் கார்த்திகை தீபத்தன்று கோவிலின் வெளியே தீபம் ஏற்றியுள்ளனர். அப்போது தீபம் ஏற்றும் போது பானைகள் உடைக்கப்படாமல் சாமி சிலைகள் உள்ளதா என பார்த்துள்ளனர். அப்போதும் சிலைகள் இருந்துள்ளது. இந்த ஆண்டு பூஜை செய்வதற்காக கடந்த 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் கோவில் நிர்வாகி மற்றும் ஊர் பொதுமக்கள் குகை கோயிலுக்கு சென்று உள்ளனர். அப்பொழுது குகை கோவில் உள்ளே செல்லும்போது சிலைகள் வைக்கப்பட்டிருந்த பானைகள் மட்டும் உடைந்து காணப்பட்டுள்ளது. பானைகளில் இருந்த 10 ஐம்பொன் சிலைகளும் காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகி உடனடியாக தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 




மேலும் குகை கோவிலுக்கு வந்த கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, ஆய்வாளர் தனலட்சுமி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குகை கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சென்னையில் இருந்து சிலை திருடு போன குகை கோவில் மற்றும் மலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு விசாரணையை நடத்தி வந்தனர். இந்நிலையில் வாணாபுரம் காவல்நிலைய துணை ஆய்வாளர் உதயசூரியன் மற்றும் காவல்துறையினர் நூக்கம்பாடி அருகே இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


 




அப்போது விசாரணையில் அவர்கள் மெய்யுரைச் சேர்ந்த மணிகண்டன் வயது (35) நுக்கம்பாடியைச் சேர்ந்த சதீஷ் வயது ( 32) எனவும் அந்த சிலைகள் மலைமஞ்சனூர் கிராமத்தில் காணாமல் போன சிலைகள் தான் என காவல்துறைக்கு தெரிய வந்தது. இதுகுறித்து ரூரல் டிஎஸ்பி அஸ்வினி தண்டராம்பட்டு ஆய்வாளர் தனலட்சுமி துணை ஆய்வாளர் சூரிய உதயசூரியன் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன. இது தொடர்பாக மணிகண்டன் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 7 ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இந்த சிலை கடத்தல் வழக்கில் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளார்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.