திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தினம் தோறும் கந்திலி, நாட்றம்பள்ளி, சிங்காரப்பேட்டை, ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு நகர பேருந்து சென்று வருகிறது. காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் அதிகம் செல்ல கூடிய நிலை உள்ளது. அதே போன்று அதே நேரத்தில் வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பயணம் செய்வதால் அரசு பேருந்தில் அதிக கூட்ட நெரிசலில் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் முதல் சிக்கி தவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பெண் பிள்ளைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி மாணவர்கள் தொங்குவதால் கம்பி உடைந்து மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களும் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி சேட்டை செய்து பயணித்து வருகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இதில் கவனம் செலுத்தி காலை மற்றும் மாலை நேரத்தில் அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.