திருப்பத்தூரில் 196 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட செக்குக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருப்பத்தூரில் கள ஆய்வின்போது தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் ‘செக்குக் கல்வெட்டு’ ஒன்றைக் கண்டறிந்தனர். 

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, சமூக ஆர்வலர் வே. ராதாகிருஷ்ணன், ராம்குமார் ஆகியோர் கள ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் ‘செக்குக் கல்வெட்டு’ ஒன்றைக் கண்டறிந்தனர். 

Continues below advertisement

இதுகுறித்து முனைவர் பிரபு கூறியதாவது,

சமூக ஆர்வலர்கள் தயாநிதி மற்றும் விமல் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் ஆதியூர் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வில் ஆதியூரின் தென்புற எல்லையில் ‘ஆலமரத்து வட்டம்’ என்ற இடத்தில் தனியார் விவசாய நிலத்தின் வரப்பில் 4 ½ X 3 ½ அடி சுற்றளவு கொண்ட பாறையினைப் பெயர்த்தெடுத்து, அதன் சமதளமான மேற்புறத்தைச் செம்மைப்படுத்தி மையத்தில் 1 அடி ஆழத்தில் குழியினை ஏற்படுத்தி அதனைச் சுற்றி சதுரவடிவில் அழகுபடுத்திச் ‘செக்கினை’ உருவாக்கியுள்ளனர்.

 


செக்குக்கல்வெட்டு:

பழங்காலத்தில் மின்சாரம் இல்லாததால் விளக்குகள் எரிப்பதற்கும், சமையலுக்கும் எண்ணெயின் தேவை மிக மிக முக்கியமானதாக இருந்துள்ளது. மக்கள் நிலக்கடலை, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை இந்த உரலில் ஆட்டி எண்ணெய் எடுத்துப் பயன்படுத்துவர். எண்ணெய் எடுப்பதற்கு கல்லால் ஆகிய சிறு உரல் போன்ற கல்செக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை, கோயில் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென செய்து தானமாகத் தரப்பட்டன. செக்கில் எண்ணை ஆட்டுபவர்கள் செக்குக்குக் கூலியாக ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெய்யை கோயிலுக்கோ அல்லது அரசுக்கோ செலுத்தியிருப்பர். குறுநில தலைவர்களாக, ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் சிலர் இது போன்ற கல்செக்கை உருவாக்கி தானமாக கொடுத்துள்ளனர். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நலம் பெறவும் வேண்டுதலின் பேரில் இத்தகைய செக்குகள் தானமாக தரப்பட்டுள்ளன. இப்படித் தானமாக தரும்போது அதைச் செய்து கொடுப்பவர் தன் ஊர், தந்தை பெயருடன் தன் பெயரையும் கல்வெட்டாக அந்தக் கல்செக்கில் பொறித்து தரும் வழக்கமும் இருந்துள்ளது. ஒரு அடி ஆழத்தில் உட்புறம் பானைப் போன்ற குழியுடன் எண்ணெய் ஆட்டுவதற்கான அமைப்புடன் இச்செக்குக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செக்கில் 3 வரிகளுடன் கூடிய எழுத்துகள் பதிக்கப்பட்டுள்ளன.

 

 


கல்வெட்டு வரிகள்:

“சோமசுந்தி(த)ர முதலியாரு சர்வதாறி(ரி) வ ருஷம்”

விளக்கம்: 

இப்பகுதியைச் சேர்ந்த ‘சோமசுந்தர முதலியார்’ என்பவர் சர்வதாரி ஆண்டில் இச்செக்கினை ஏற்படுத்தி வழங்கியுள்ளார் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. பொதுவாக இவ்வகையான செக்குகள் அக்காலத்தில் கோயிலுக்கு விளக்கேற்றுவதற்கான எண்ணை தயாரிக்க ஏற்படுத்தித் தரப்படும். அதற்குச் சான்றாகக் கோவில் பெயர், சுவாமியின் பெயர் அல்லது சைவ, வைணவக் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆதியூரில் உள்ள செக்கில் அவ்வகையான எந்தக் குறிப்புகளும் இல்லை என்பதால், இச்செக்கு மக்கள் பயன்பாட்டிற்கோ அல்லது சிறுதெய்வ கோயிலுக்கோ வழங்கப்பட்டிருக்கலாம். கல்வெட்டில் பிழைகளோடு எழுதப்பட்டுள்ளது. அதாவது சோமசுந்தர முதலியார் என்பதை சோமசுந்திர முதலியார் என்றும்; சர்வதாரி என்பதை சர்வதாறி என்றும் எழுதியுள்ளனர். சர்வதாரி ஆண்டினைக் குறிப்பிடுவதாலும் எழுத்துக்களின் அமைப்பினை வைத்துப் பார்க்கும் பொது இச்செக்குக்கல்வெட்டானது 196 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டதாகும். அக்கால மக்கள் விளக்கெரிக்கவும் இதரப் பயன்பாட்டிற்காவும் முன்வந்து வழங்கப்பட்ட இவ்வரலாற்று ஆவணம் திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்” என்றார்.

Continues below advertisement