திருப்பத்தூர் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி சிமெண்ட் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. மேலும், சேறு போல் இருக்கும் குடிநீரை விநியோகம் செய்வதால் தொழு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பூரிகமாணிமிட்டா பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுபமங்களம் பகுதியில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து ஆத்தூர், சுபமங்களம், குள்ளியான் வட்டம், கானாக்கார் வட்டம் பகுதியை சேர்ந்த 400 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

 

அந்த மேல் நீர்தேக்க தொட்டியின் சிமெண்ட் பெயர்ந்து கம்பி தெரிகிறது. இந்த நிலையில் அந்த மேல்நீர்தேக்க தொட்டியிலிருந்து வழங்கக்கூடிய குடிதண்ணீர் அழுக்கு படிந்து சேறாக  வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 



 

இதனால் வேறுவழி இன்றி அப்பகுதிமக்கள் சேறாக வரும் குடிதண்ணீரை பயன்படுத்தி வருவதாகவும் இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் அபாய நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள்  குற்றம் சாட்டுகின்றனர். 

 

எனவே இதுகுறித்து துறைசார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சிமெண்ட் பெயர்ந்து கம்பி தெரியும் நிலையில் உள்ள மேல் நீர்தேக்கதொட்டி மற்றும் உடைந்த பைப்லைனை சரிசெய்தும் சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.