திருப்பத்தூர் அருகே காட்டுப் பன்றிக்கு வைத்த மின்சார கம்பியால் மின்சாரம் தாக்கி தந்தை மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக நிலத்தில் மின் வேலி அமைத்த நபரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு காளியம்மன் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மர்ம நபர்கள் காட்டுப் பன்றியை பிடிக்க மின்சார வேலி அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த லிங்கன் மகன் கரிபிரான் (65) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் (40) மற்றும் அவருடைய மகன் லோகேஷ் (15) ஆகிய மூன்று பேரும் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் பெருமாபட்டு பகுதியில் உள்ள ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி மூன்று நபர்களும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மூன்று பேர் உயிரிழந்ததை அறிந்து குருசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மேலும் குரசிலாப்பட்டு போலீசார் விசாரணையில் முருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை காளியம்மன் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணிய மகன் நீதி (55) என்பவர் காட்டு பன்றியை வேட்டையாட மின் வேலிகளை அமைக்கப்பட்டது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்த நீதி என்பவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி தந்தை மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.