திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 12.8.2021 முதல் 10.9.2021 வரை 30 நாட்களில் 1118 பண்ணை குளங்கள் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பருவமழை காலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட இந்த பணி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, எலைட் வேல்ட் ரெக்கார்ட், ஏசியன் ரெக்கார்ட், இந்தியா ரெக்கார்ட் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட் ஆகியவை உலக சாதனையாக அங்கீகரித்து, அதற்கான சான்றுகளை நேற்று வழங்கி இருக்கிறது. இந்நிலையில், 30 நாட்களில் 1,118 பண்ணை குளங்களை அமைத்து உலக சாதனை நிகழ்த்த காரணமாக இருந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் பாராட்டு விழா  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, சரவணன், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


 




 


மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்: நான் மாவட்ட ஆட்சியராக திருவண்ணாமலையில் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இருந்தது. இதனை எப்படி உயர்த்துவது என்ற எண்ணம் என்னில் இருந்தது. அப்போது கூடுதல் ஆட்சியர் பிரதாப் நானும் இந்த பண்ணைக்குட்டை வெட்டி அதில்  தண்ணீர் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும். மேலும் இதை எப்படி செய்வது என்று எண்ணி இருந்தோம். அதற்காக எங்களுக்கு நான்கு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என அனைவரின் ஒத்துழைப்பால் எங்களால் 1118 பண்ணைகுட்டைகளை வெட்ட முடிந்தது. நாங்கள் வெட்டி முடித்த பின்னர் பருவ மழை பெய்தது இதனால் அனைத்து குட்டைகள் தண்ணீர் நிரம்பியது. இதனால் தற்போது  நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என தெரிவித்தார். 


 




 


பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்:  ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்களுடைய மாவட்டத்தை முன்னிலை அடைவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.  சமூக நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான், பயனுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியும். கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில்  கனமழை பெய்தது. பாலாற்றில் இருகரையும் தொட்டபடியும் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடியது. இதற்கு காரணம் தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நல்ல மழை பெய்திருக்கிறது என பொதுமக்கள் பாராட்டுகின்றனர். பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்க, இது போன்ற பண்ணை குட்டைகள் அமைப்பது அவசியம். தமிழகத்தில் எந்த ஆட்சியிலும் செய்யாத ஒன்றை நமது முதல்வர் செய்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கு என தனித்துறையை முதல்வர் உருவாக்கி உள்ளார். ஏனென்றால் வரும் காலங்களில் காலநிலை எப்படி எல்லாம் மாறுபட்டும் என்று தெரியவில்லை அதற்கு ஏற்றார் போல் நாமும் மாறிக்கொள்ள வேண்டும் அப்போது தான் நாம் வாழமுடியும்.  மாவட்டம் முழுவதும் 1118 பண்ணை குட்டை நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் 19 கோடி ரூபாயில் உருவாக்கியதன் மூலம், இந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


 




 


நாம் பயன்படுத்தும் தண்ணீரில் 25 முதல் 40 சதவீதம் வரை நிலத்தடியில் இருந்து பெறுபவை. டெல்டா மாவட்டங்களில் ஆற்று பாசனம் மூலம் பயன்படுத்துகின்றனர். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம் கிணற்று பாசனத்தை நம்பியுள்ளது. எனவே, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்போது அமைக்கப்பட்ட பண்ணை குட்டைகளை போல எதிர்வரும் கால்களில் இன்னும் பல இடங்களில் பண்ணை குட்டைகளை அமைப்பது அவசியம். அதற்கு, அரசுத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பங்காற்ற வேண்டும். 


நீர் மேலாண்மை திட்டத்திலும் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் என்ற நிலை உருவாக வேண்டும். நிலத்தடி நீரை சேமிப்பதுதான், அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் கடமையும், நன்மையுமாகும். வரும் தலைமுறைக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் என்றால் நிலத்தடி நீரை சேமிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். எனவேதான், நீர் மேலாண்மைக்கு என தனித்துறையை முதல்வர் உருவாக்கி இருக்கிறார். நீர்நிலைகளை பாதுகாக்க 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது என்று கூறினர்.


நிகழ்ச்சியில், உலக சாதனையை அங்கீகரிக்கும் சான்றுகளை, எலைட் வேல்டு ரெக்கார்ட், ஏசியன் ரெக்கார்ட், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகளின் சார்பில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் அளித்தனர். அதனை பண்ணை குளங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு, பாராட்டு சான்றுகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்