திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் வேளாண்மை துறை அலுவலகம் எதிரே குழந்தைவேல் என்பவர் நிலத்தில் தனக்கு சொந்தமான மாடுகளைக் கட்டி வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாடுகளை மேய்க்க ஓட்டி சென்று விட்டு கொட்டகையில் கட்டுவதற்காக வரும் போது கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி அடையாளம் தெரியாத விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அதற்கு பக்கத்து நிலத்துக்காரர் சேக் உசேன் என்பவர் மனைவி ஜெயராபி ஆகியோர் நிலத்தில் இருக்கும் போது நிலத்தின் அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சென்றதாக கூறினாராம். இதனை சிலர் சிறுத்தை தோற்றத்தில் விலங்கு நடமாடியதாகவும் அப்பகுதியில் உள்ள சிலர் சமூக வலைதளங்களின் மூலம் செய்திகளை பரப்பினர். இதன் அடிப்படையில் ராதாபுரம் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம் எதிரே மர்ம விலங்கு கடித்த இடத்தை வனத்துறை அதிகாரி மனோகரன் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறை அதிகாரிகளிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு நடத்தினார். வனத்துறை அதிகாரிகள் கோட்டாட்சியரிடம் இரவு நேரமாகி விட்டதால் தற்போது எதுவும் செய்ய முடியாது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என கூறினர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் வந்த மர்ம விலங்கு கால் தடத்தை சென்னை கிண்டியில் உள்ள வன உயிரியல் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும்.இந்த கால்தடம் மர்ம விலங்குடைய கால்தடம் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுகையில், எங்கோ நடந்த போட்டோ காட்சிகளை பயன்படுத்தி யாரோ சிலர் வேண்டுமென்றே வலைதளம் மூலம் வதந்தி பரப்பி வருகின்றனர். அதை உண்மை என நம்பி பலர் அதனை மற்றவர்களுக்கு அனுப்பவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ராதாபுரத்தில் வனவிலங்கு நடமாட்டம் எதுவும் கிடையாது என வனத்துறை அதிகாரிகளும் இதை மறுத்துள்ளனர். பொதுமக்கள் சமூக வலை தளத்தில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். மேலும் இந்த பகுதியில் சாத்தனூர் அணை வனத்துறை அலுவலர்கள் சுழற்சிமுறையில் வேளாண்மை அலுவலகம் எதிரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.