கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை முன்களப் பணியாளராக பணியாற்றிவரும் காவல்துறையினர் சரியான முறையில் விடுப்பு எடுக்காமல் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர். இதனால் பணி சுமை அதிகரிப்பதோடு மனதளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது. 


இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் அனைத்து நிலையில் பணியாற்றும் காவலர்களின் பணிசுமையை போக்கும் வகையில் பிறந்த நாள் அன்று விடுப்பு அளித்து, அவர்களுக்கு குடும்பத்துடன் காவல்நிலையத்திற்கு வரவைத்து கேக்வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவிக்குமாறு புதியதாக பொறுப்பேற்ற  காவல் காணிப்பாளர் பவுன்குமார் அறிவித்துள்ளார். 


 




 


இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் , உற்சாக்கத்தையும் கொடுத்துள்ளது அதனைத்தொடர்ந்து ஆரணி காவல்நிலையத்தில் பணியாற்றும் ஏட்டாக பணிபுரிந்து வரும் மதிவாணனின் 28 வது பிறந்த நாளை  காவல்நிலைய வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


 இந்த பிறந்தநாள் கொண்டாட்த்தில் மதிவாணனின் மனைவி மஞ்சுளா,குழந்தை சர்வேஷ் மற்றும் பயிற்சி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் ஹாப்பி பர்த்டே மதிவாணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  என மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர். 



இதனைப்பற்றி மதிவாணனிடம் கேட்ட போது நெகிழ்ச்சியுடன் பேசினார்...


‛‛காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் பெரும்பாலானோர் தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடனும் மற்றும் குடும்பத்தினருடம் அதிக அளவில் கொண்டாடி இருக்க மாட்டார்கள். ஏன் என்றால் எங்களுக்கு விடுப்பு இல்லாமலும் விடுமுறை கிடைக்காமல்  எங்கேயாவது  ஒரு பகுதியில் ஆர்பாட்டம் மற்றும் பந்தோபஸ்த் போன்ற இடங்களில் எங்களுடைய பிறந்த நாளை மன வேதனையுடன் கழித்து வந்துள்ளேன்.  ஆனால் இப்போது காவலர்களின் பணிசுமையையும் , மன அழுத்தத்தையும் புரிந்து கொண்டு பிறந்தநாள் அன்று விடுப்பு வழங்குவதோடு, பிறந்தநாளை காவல்நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அவர்கள் அனுமதி வழங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக என்னுடைய மனமார்ந்த நன்றியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்,’’ எனக்கூறினார். 


இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டியிடம் கேட்டபோது...


‛‛காவல்துறையில் உள்ள காவலர்கள் பல விதமான பணிசுமை , மன அழுத்தம் போன்றவற்றில் உள்ளனர். இதனால் அவர்களை மன அழுத்தத்தை போக்க மற்றும் அவர்களுடைய பிறந்தநாளை வீட்டில் கொண்ட முடியாமல் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகின்றனர். இதனால் காவலர்களுடைய பிறந்தநாள் அன்று விடுப்பு வழங்கியுள்ளோம். அதுமட்டுமின்றி பிறந்தநாள் அன்று விடுப்பு வழங்கபடுகிறதா, என ஆய்வு செய்யப்பட்டும் ஆய்வில் விடுப்பு வழங்கப்படவில்லை என்று தெரியவந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ எனக் கூறினார்.