திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாரந்தோறும் மக்கள் மனு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் வளாகத்தில் தனது வீடு மற்றும் நிலத்தை , தன்னுடைய மகனிடம் இருந்து மீட்டு தரக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி என தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற நபர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுக்க சாத்து பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன் வயது (85), இவருடைய மனைவி தும்பா வயது (60), இவர்களுக்கு ரமேஷ் மற்றும் பன்னீர்செல்வம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ரமேஷ் மனைவி சரிதா இவர்களுக்கு தமிழரசன் வயது (13), குணா வயது (11) என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரமேஷின் மனைவி சரிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2019-ம் அக்டோபர் மாதம் இறந்து விடுகிறார்.
இந்நிலையில், இறந்து போன சரிதாவின் உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் ரமேஷின் இரு மகன்களான தமிழரசன் மற்றும் குணா ஆகிய இருவருக்கும் வீடு நிலம் எழுதி வைக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனால் சுப்பராயன் தனது மூத்த மகன் ரமேஷை நம்பி செட்டில்மெண்டாக நிலத்தின் ஒரு பகுதியையும், வீட்டின் ஒரு பகுதியையும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுப்பராயன் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து மூத்த மகன் ரமேஷ் மோசடியாக செட்டில்மெண்டை கிரைய பத்திரமாக தயார் செய்து, தனது தம்பிக்கு சேர வேண்டிய சொத்தை தனது தந்தையை ஏமாற்றி மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளார் எனவும், பத்திரம் பதிவு செய்து கொண்ட நாள் முதல் இதுவரை வயதான சுப்புராயன் மற்றும் அவரது மனைவி சரிதா இருவருக்கும் இருப்பிடம் மற்றும் உணவு உடைகள் உள்ளிட்டவை வழங்காமல் அலைக்கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சுப்பராயன் அவரது மனைவி தும்பா ஆகிய இருவரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலியாக பத்திரம் பதிவு செய்து கொடுத்த நிலத்தை மீட்டு தரக்கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை அறிந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை தடுத்து நிறுத்தி முதியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதே போன்று தொடர்ச்சியாக வாரம்தோறும் தங்களுடைய பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயல்கின்றனர். ஆனால் அவர்கள் மீது திடீரென தீப்பற்றி கொண்டால் அணைப்பதற்கு அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும், அவர்களை காப்பாற்றுவதற்கு காவல்துறையிடம் எந்தவித உபகரணமும் இன்றி குறைந்த அளவே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அப்பகுதியில் தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்