தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,03,95,103 பேரும், பெண் வாக்காளர்கள் 3,14,23,321 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,758 பேரும் உள்ளனர். தொடர்ந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023ன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பது ஆகியவை நடந்தது.


 




 


அதன்படி வாக்காளர் பட்டியலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெயர் சேர்க்க 10,34,018 பேரும், நீக்கம் செய்ய 7,90,555 பேரும், முகவரி மாற்றம் செய்ய 4,78,726 பேரும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 11 பேரும் என மொத்தம் 23,03,310 பேர் விண்ணப்பித்தனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 3 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் அதாவது 61 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 91.4 சதவீதம் பேரும், கள்ளக்குறிச்சியில் 89.03 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 30 சதவீதம் பேரும் ஆதார் எண் இணைத்துள்ளனர். ஆதார் இணைக்கும் பணி வருகிற மார்ச் மாதம் வரை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


 




 


திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், செய்யார், வந்தவாசி, போளூர், கலசப்பாக்கம், ஆரணி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வாக்காளர் பட்டியலை வெளியிட கோட்டாட்சியர் மந்தாகினி பெற்றுக் கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 20 லட்சத்தி 59 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்தி 9 ஆயிரத்தி 411 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்தி 50 ஆயிரத்து 150 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 115 பேரும் உள்ளனர். புதியதாக 33 ஆயிரத்து 517 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்தி 499 ஆண் வாக்காளர்களும், 18 ஆயிரத்தி 001 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.