திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (85), இவரது மனைவி  சின்னம்மாள் (75),  ஆகிய இருவர்களுக்கு காத்தவராயன், சங்கர், என்ற 2 மகன்களும் ஜெயலஷ்மி, ஜான்சிராணி,  செல்வி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில்  வயதான மாணிக்கம் சுயமாக சம்பாதித்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளார், இந்தநிலையில் மாணிக்கம் மற்றும் அவரது  மனைவியையும் மருத்துவச் செலவு மற்றும் உணவு உடை ஆகியவற்றைத் தந்து பராமரித்து கொள்வதாக மகன்கள் கூறியுள்ளனர். 



இதனை நம்பி மாணிக்கம் கடந்த 18-2-2021 அன்று மூத்த மகன் காத்தவராயன் இளைய மகன் சங்கர் ஆகிய இருவரின் பெயரில் வீடு மற்றும் 5 ஏக்கர் நிலம் கிணறு உள்ளிட்டவற்றை தான செட்டில்மென்ட்டாக எழுதி கொடுத்துள்ளார். இதையடுத்து இரண்டு பிள்ளைகளும் நிலம் மற்றும் வீட்டை கைப்பற்றி அனுபவித்து வந்துள்ளனர். பின்னர் வயது முதிர்ந்த தந்தை, தாய் ஆகிய இருவருக்கும் கொடுத்த வாக்குறுதியை செய்யாமல் தாய் தந்தை இருவரையும் வீட்டைவிட்டு வெளியில் துரத்தி உணவு, உடை எதையும் கொடுக்காமல் தவிக்க விட்டு வந்துள்ளனர்.


கடந்த ஆறு மாதமாக உணவு இல்லாமல் தவித்து தெரு வீதியில் வாழ்ந்து வந்த வயதான தம்பதியினர் கடந்த 20ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷை நேரில் சந்தித்து தங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து முதியோர் நலன் காக்கும் சட்டத்தின்படி மீண்டும் எங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்து தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை மனுவினை அளித்தனர். இதேபோல் உடையானந்தல்  கிராமத்தை சேர்ந்த ராயர் என்பவர் தன் பெயரில் உள்ள 3 ஏக்கர் 60 சென்ட் நிலத்திலனை தனது மகன் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.



சொத்தை பெற்றுக்கொண்ட  மகன் இவரை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ராயர் தனது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் மகன் மீது எழுதி வைத்த நிலத்தை  மீண்டும் தனது பெயருக்கு மாற்றித் தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். முதியவர்களிடமிருந்து  மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் உடனடி நடவடிக்கையாக  தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்து மீண்டும் முதியவர்களின் பெயருக்கு மாற்றி தரப்படும் என்று உறுதி அளித்தார். இந்நிலையில்  இன்று மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு மீண்டும் முதியோர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்து அதற்கான ஆவணத்தை மாணிக்கம் மற்றும் ராமரிடம் கலெக்டர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் -2007ன்  கீழ் 2 மூத்த குடிமக்கள் பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்துப் பத்திரம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர்கள் பெயரில் பட்டா  வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.