திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த உள்ள தே.ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி விக்னேஷுக்கும் (25), தானிப்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியை சார்ந்த சென்னம்மாளுக்கும் (23) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருவுற்ற சென்னமாள் தானிப்பாடியில் உள்ள தனது தாய் வீட்டில் பிரசவத்திற்காக காத்திருந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி சென்னமாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சென்னமாளை தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவருக்கு அன்று மாலை ஆண் குழந்தை பிறந்தது. தொடந்து சென்னமாள் சுயநினைவின்றி  இருந்து வந்த நிலையில்  ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.



அதனை தொடர்ந்து மருத்துவமனையில் சுயநினைவு இழந்து சிகிச்சை பெற்று வந்த சென்னம்மாளுக்கும் உடல்நலம் திடீரென பாதிப்பு அதிகரித்த நிலையில், நேற்று இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். ஆனால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சென்னமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த சென்னம்மாளின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் அனைவரும் தானிப்பாடி அரசு மருத்துவமனை முன்பு இன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு உள்ளனர். பின்னர் அப்பகுதியில் அரூர்- திருவண்ணாமலை செல்லக்குடிய நெடுஞ்சாலையை மறித்து செல்லமாளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் குறித்து உறவினர்கள் கூறுகையில், தானிப்பாடி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடியவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவர்கள் இல்லாததாலும், மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவுமே தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர். தானிப்பாடி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பணியில் உள்ள மருத்துவரை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும்.  உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.


போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தானிபாடி காவல் நிலைய  ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 



தாயும் சேயும் மரணம் அடைந்தது தொடர்பாக  முதன்மை மருத்துவர் முப்பினிடம் பேசுகையில், எங்களுடைய மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமத்திக்கப்பட்ட சென்னமாளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளித்தோம். ஆனாலும் குழந்தை பிறந்த சிலமணி நேரங்களில் இறந்துவிட்டது. மேலும் தாயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாங்களே 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னமாளை திருவண்ணாமலை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பினோம் அப்போது மருத்துவமனையில் இருந்து செவிலியர்கள் இரண்டு நபர்களையும் அவர்களுடன் அனுப்பினோம் தாயை காப்பற வேண்டும் என்ற குறிக்கோள் தான் எங்களுடைய மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  அப்போது சென்னமாளின் உறவினர்களும் இருந்தார்கள் நாங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுத்தோம் என்று அவர்களும் பார்த்தார்கள் என்றும் தானிப்பாடி மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் உள்ளனர் என்றும்  தெரிவித்தார்.