திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நகரமன்றத் தலைவர், துணைத் தலைவர் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை வாழ்த்தி பேசினார். நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி வரவேற்றார். விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், திருவண்ணாமலை நகர மன்றம் பழம்பெரும் நகர மன்றம். இதற்கு முன் ஏற்கனவே 13 நபர்கள் தலைவராக பணியாற்றி உள்ளனர். தற்போது முதன்முதலாக பெண் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். திருவண்ணாமலை வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இங்கு எந்த வார்டும் வளர்ச்சி பணியில் புறக்கணிக்கப்படாது. அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒருவரை ஒருவர் பிரித்துக் கொள்ளக்கூடாது. ஒற்றுமையாக மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும்.
மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் அடுத்த தேர்தலில் நீங்கள் வென்று விடலாம். முதல் பணியாக இரவில் இருள் இல்லாத வகையில் உங்கள் வார்டில் மின் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் தட்டுப்பாடின்றி குடிநீர் வசதியும், தரமான சாலை வசதியும் கொண்டு வரவேண்டும். பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்திருக்கும். அவற்றை முறைப்படுத்த வேண்டும். தங்கள் பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குப்பைகள் அகற்றப்படவேண்டும். கழிவு நீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பணிகளை செய்தால் மக்கள் உங்களை பாராட்டுவார்கள். மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் திருவண்ணாமலைக்கு வெளிநாட்டினர், பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள் பலர் வருகின்றனர். எனவே நகரத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிரிவல பாதையின் சில இடங்கள் சில ஊராட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலும் பக்தர்களின் பார்வையில் அது நகராட்சிக்கு உட்பட்ட இடமாக தெரிகிறது.
எனவே கிரிவலப்பாதை நகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்துசமய அறநிலைதுறை சார்ந்த அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் திருவண்ணாமலை நகராட்சியில் வரி உயர்வு என்பது தாறுமாறாக இருந்தது. எனவே நகர்மன்ற கூட்டத்தில் முதல் தீர்மானமாக வரியை முறைப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாக இயற்றப்பட வேண்டும். திருவண்ணாமலை வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளதாலும், மக்கள் தொகை அதிகரிப்பாலும் அடிக்கடி தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது.
இது குறித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அவர் இந்த பிரச்சினையை தீர்க்க எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கேட்டார். நான் 5,500 கோடி என்று தெரிவித்தேன். உடனடியாக அவர் கையெழுத்திட்டார். அதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது. அதில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து நாமும் காவிரி கூட்டுக் குடிநீர் குடிக்க போகிறோம். இந்த திட்டம் செயல்படுத்தும் போது அதை நீங்கள் முறைப்படுத்த வேண்டும். ஏனெனில் அதிகாரம் உங்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் எம்.எல்.ஏ.கள் ஜோதி, சரவணன், மு.பெ.கிரி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னால் எம்.பி. வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.