திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம், அதேபோன்று இந்த வாரமும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர். இந்நிலையில் ஆரணி கைலாசநாதர் கோயில் பின்புறம் வசிக்கும் லீலா வயது (48) என்பவர் மனு கொடுக்க வந்தார். அவர் தான் வளர்த்து வந்த 50 பன்றிகளை திருடு போனதாகவும் அந்த பன்றிகளை கண்டுபிடித்து தருமாறு தன் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர்,அந்த பெண்ணை தடுத்து அவரிடம் இருந்து மண்ணெண்ணைய் கேனை பிடுங்கி பலீலாவதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் லீலா கூறியதாவது, எனக்கு குமார் என்பவருடன் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய கணவர் குமார் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மகளைப் பராமரிக்க முடியாமல் தவித்து வந்தேன். அதன் பிறகு நான் என்னுடைய மகளை செய்யாற்றில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளேன். அவள் அந்த காப்பகத்தில் தங்கி பள்ளியில் பயின்று வருகிறார். எனது வாழ்வாதாரத்திற்காக நான் பன்றிகளை வாங்கி அதனை வளர்த்து பராமரித்துக்கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக பன்றிகளை வளர்த்து வருகிறேன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் என்னுடைய 50 பன்றிகளை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
அதன் பிறகு பன்றிகள் காணவில்லை எனக்கூறி ஆரணி நகர காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறேன். திருடு போன என்னுடைய 50 பன்றிகள் கிடைக்காததாலும், எனக்கான நீதியும் கிடைக்காததாலும், மன வேதனை அடைந்த நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணைம் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை மீட்டு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்