நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று சித்ரா பௌர்ணமி விழா வரும் 16-ஆம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 15-ஆம் தேதி பின்னிரவு 2.32 மணிக்கு தொடங்கி, 16ம் தேதி பின்னிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது , என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சித்ரா பௌர்ணமியன்று வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 15 முதல் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பிலும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் சார்பிலும் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. அதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் முன்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
”சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதர வேண்டும். பொது கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவும், மினிலாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பொது சுகாதாரத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். மேலும், வடக்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சித்ரா பௌர்ணமி கிரிவலத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், 2,806 சிறப்பு பேருந்துகள் 6,086 நடைகளும், 201 தனியார் பேருந்துகள் 509 நடைகளும் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
குறிப்பாக, சென்னை வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், சிறப்பு பேருந்துகள் அனைத்தும் வரும் 16-ஆம் தேதி அதிகாலை முதல் 17-ஆம் தேதி வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 15-ஆம் தேதி இரவு முதல் 17-ஆம் தேதி வரை நகருக்குள் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை.
9 இடங்களில் அமைத்துள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் வரை சிறப்பு பேருந்துகள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கார், வேன் நிறுத்துவதற்காக நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் 45 பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது” என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்