திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவுவரை கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டம் முழுவதும் 30 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக நாட்றம்பள்ளியில் 52 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருந்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் உள்ள தரைப் பாலம் வழியாக அருகே உள்ள தண்டுகானூர், மாங்குப்பம், காரக்காரன்கொட்டாய், மங்களம் பள்ளி, என சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த தரைப் பாலம் வழியாக சென்று வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறுக்கு செல்லும் கிளை நீரோடை கொரட்டி பகுதியில் இருந்து தொடங்கி ஊத்தங்கரையில் சென்று முடிகிறது சென்று முடிகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கொரட்டி நீரோடையில் தற்போது அதிக வெள்ளம் செல்வதால் தரைப் பாலம் உடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கொரட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயன் தற்காலிகமாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் வண்ணம் கயிறு கட்டி நீரோடயை கடக்க வழிவகை செய்தார். மேலும் உடைந்த தரைப்பாலத்தை சரி செய்து தரப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் வெள்ளம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த முறையைக்கூட பின்பற்ற முடியாமல் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்படும் என்பதால் விரைந்து அரசு இப்பகுதியில் பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இதேபோல நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் அடுத்த மன்ற பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் வேலை செய்து வரும் ராமன்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி அவரது தாய் வீட்டில் பிள்ளைகளோடு வசித்து வருகிறார். இந்நிலையில் ராமன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை பெய்த கனமழையால் ராமனுடைய வீட்டின் இருபக்க சுவர்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி உள்ளார். சுவர் விழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது ராமன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.