திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த இளையாங்குன்னி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டரணை கிராமத்தில் குறவர் இன குடும்பத்தினர் 120க்கும் மேற்பட்ட  நபர்கள்  வசித்து  வருகின்றனர். அதே கிராமத்தை  சேர்ந்த கட்டையன் மகன் தங்கமணி வயது (49) இவர் இவருடைய மனைவி மலர் (35) இவர்களுடைய மூத்த மகன்  திருமூர்த்திக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மகன் தினகரன்  இவர்  தனியார்  கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மற்றும் நந்தினி என்ற மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். தங்கமணி அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி கடந்த 26 ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக  அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விசாரணைக்கு பின்னர் தங்கமணியை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை கிளைச் சிறையில் 26ம் தேதி இரவு அடைத்துள்ளனர்.


 




 


இந்நிலையில் நேற்று காலை அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  காவல்துறையினர்  தங்கமணியை  திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால்  தங்கமணி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே மாலை 4 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக தங்கமணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியததால் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்த மரணம்  குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் அளிக்க  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவுகளை மூடியதுடன் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல  அனுமதி மறுத்தனர். இந்த சம்பவத்தால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது இதையடுத்து ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க காவல்துறையினர் உள்ளே அனுமதித்தனர்.


 




 


நீண்டநேரத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் முருகேஷை சந்தித்த உறவினர்கள் சாராயம் காய்ச்சுவது கூறி எங்களை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும் எங்களை குண்டர் சட்டத்தில் போடாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல்துறையினர் மிரட்டுவதாகவும், பணம் இல்லாதவர்களை கடுமையாக தாக்கி சிறையில் அடைப்பதாகவும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தங்கமணியின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.


இந்நிலையில் கடந்த 26ம் தேதி எனது கணவரை சாராயம் காய்ச்சுவதாக கூறி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல்துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதுடன் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தர மறுத்ததால் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடியாக உங்களுடைய கிராமத்தில் நேரடியாக விசாரணை நடத்துவதாகவும் மேலும் இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.




 


 


 இறந்துபோன தங்கமணியின் மகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் 


இறந்து போன்  தங்கமணி  என்னுடைய  தந்தை  அவர்  வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தார் அப்போது திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க காவல்துறை ஆய்வாளர் நிர்மலா மற்றும்  எஸ்பி சிஐடி பழனி  ஆகிய  இருவரும் என்னிடம் உன்னுடைய  தந்தையை விடவேண்டும் என்றால்  1 லட்சம் பணம்  கொடுத்தால் உன்னுடைய தந்தையின் மீது  நாங்கள் குண்டாஸ்  போட்டு விடுவோம் அதன்பிறகு உன்னுடைய தந்தையை வெளியில் எடுப்பதற்கு 5 லட்சம் பணம் செலவு ஆகும் என்று காவல்துறை கூறியதாகவும், நாங்கள் ஏழை குடும்பம் என்பதால் எங்களிடம் பணம் இல்லை எனக்கூறினோம், அதன்பிறகு மதுவிலக்கு அமலாக்க அடித்ததால் என்னுடைய தந்தை இறந்தார் என்றும், நாங்கள் குறவர் இன மக்கள் என்பதால் தங்கள் மீது பொய்யாக சாராய வழக்கு போடுவதாகவும் சாராய வழக்கு போடக் கூடாது என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும், தனது அப்பாவின் மரணத்திற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தான் காரணம்




 


 


இதனால் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் அவருடன் வந்த காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவம் வேறுஎங்கு நடைபெறகூடாது என்று இறந்துபோன தங்கமணியின் மகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கிராமத்தார் மீது போடும் பொய் வழக்குகளை போலீசார் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த உறவினர்களை காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.