கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் முதல் அலை ஓய்ந்த பிறகு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியது.
தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தி வருகிறது. இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் 35 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் தடுப்பூசி போடும் நபர்களுக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக 2 கிராம் தங்க மோதிரமும் இரண்டாம் பரிசாக எவர் சில்வர் அண்டாவும், மூன்றாம் பரிசாக செம்பு குடமும், நான்காம் பரிசாக செம்பு குடிநீர் பாட்டில், ஐந்தாம் பரிசாக பித்தளை தாம்பாள தட்டு, அடுத்த 4 பேருக்கு 10 லிட்டர் பால் கேனும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த தடுப்பூசி முகாம்கள் குறித்து கிராமம் முழுவதும் தண்டோரா போடப்பட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.