அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஏக்கர் கரும்பு பயிர் தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தது. தீயணைக்கும் வாகனம் தண்ணீர் இல்லாமல் அணைக்க முடியாமல் போனதால் விவசாயி கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. 

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கல்லரைபட்டி கிராமத்தில் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயி காதர் பாஷா என்பவர் கரும்பு பயிர் பயிரிடப்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று மாலை கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டு மலவலவென தீப்பற்றி எரிந்துள்ளது.



 

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து 45 நிமிடம் கழித்து தீயணைப்பு வாகனம் விவசாய நிலத்திற்கு சென்று ஐந்து நிமிடங்கள் தண்ணீரை பீச்சு அடித்து தீயை கட்டுப்படுத்த முயன்றபொழுது, தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் தீயை அணைக்க இயலாமல் தீயணைப்பு துறையினர் முயற்சியை தொடர தண்ணீரை மீண்டும் நிரப்பி வருவதற்குள் மூன்று ஏக்கர் கரும்பு தோட்டத்தில் உள்ள பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆகி உள்ளது.

 

விவசாயி காதர் பாஷா தனது குடும்பத்துடன் கொழுந்து விட்டு எரியும் கரும்பு தோட்டத்தில் தீயை அணைக்க கடும் முயற்சி செய்தும் பலனளிக்காமல் போகவே தீயை அணைக்க முடிய வில்லையே என அவர் கதறி அழும் காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது. கரும்பு பயிர் முழுவதுமாக விளைந்து கரும்பு ஆலைக்கு கட்டிங் செய்து கொண்டு செல்ல கடந்த 20 நாட்களாக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கரும்பு நாசமானது விவசாயியையும் அவர் குடும்பத்தையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.