ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விண்டர் பேட்டை பகுதியில் ராம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட்  ஓடு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ஷிப்ட் முறையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்தமிருக்கும் 500 தொழிலாளர்களில் தமிழ்நாடு  மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் இந்த தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.

 


 

நேற்று நள்ளிரவு பணியிலிருந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நீராவி கொதிகலன் (ஸ்டீம் பாய்லர்) அதிக சுமை காரணமாக  வெடித்துச் சிதறியது . இதன் காரணமாக  அருகாமையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது கொதிகலனில் இருந்த கொதி தண்ணீர் வெடித்துச் சிதறியது.


 

இந்த விபத்தில் அருகாமையிலிருந்த ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த் (23) , உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜாவித் (21), சர்பர் அலி (25) , ராகுல்பி (19), பங்கஜ் குமார்  (25) மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராம் (19) உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். மீதமிருந்த 4 தொழிலாளர்களுக்கு லேசான காயம் என்று கூறப் படுகின்றது. கொதிகலன் வெடித்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் வேலைபார்த்து கொண்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். படுகாயமடைந்த  ஆறு பேரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டனர். லேசான காயமடைந்த 4 பேருக்கு அரக்கோணம் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



 

இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் நகர காவல்துறை அதிகாரிகள் அந்த தொழிற்சாலை நிர்வாகத்திடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி சேர்ந்த வசந்த் உட்பட 4 தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிக சுமை மற்றும் தொழிற்சாலை இயந்திரங்களை ஒழுங்கான முறையில் பராமரிக்காதுதான் இந்த விபத்திற்கு காரணம் என்று ஒரு பிரிவு தொழிலாளர்கள் குற்றம் கூறி வரும் நிலையில், இதனை அந்த தொழிற்சாலை நிர்வாகம் முற்றிலுமாக மருத்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


 

அரக்கோணத்தில் செயல்படக்கூடிய இந்த தனியார் சிமெண்ட் நிறுவனத்தை இன்று காலை ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர் நலத்துறை அலுவலர் மற்றும் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.