ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சினிமா பட பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து  தொழில் அதிபரிடம் பணம் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்திற்குத் திட்டம் வகுத்துக்கொடுத்த  நிஜ  வருமானவரித் துறை அதிகாரியும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆட்டோ கண்ணன் வயது 47. ஆற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கண்ணன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி இன்னோவா காரில் வந்த ஒரு கும்பல் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீட்டை சோதனையிட்டு , கண்ணிண்டாம் கணக்கில் வராத தொகை ஆறு லட்சம் இருப்பதாகவும் எனவே அதை தாங்கள் கைப்பற்றி செல்வதாகவும் தத்ரூபமாக நடித்து  ஆறு லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தனர்.

 



 

கண்ணன் ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை  கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சையிடம் அளித்த புகாரின் பேரில், ஆற்காடு நகர காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் 8 பேர்கொண்ட சிறப்புக் காவல் படையினர்  விசாரணையில் இறங்கிய போலீசார்,  அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து முதலில் எழிலரசன் வயது 39 என்பவரைக் கைது செய்து, அவர் அளித்த  வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கூட்டாளிகளான பரத் 44 , மது 50 , ராமகிருஷ்ணன் 58 (சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிபவர்) உட்பட ஆறுபேரை கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் எழிலரசன் சுமார் 5 ஆண்டு காலம் கண்ணனின்  வீட்டில் வாடகைக்குக் குடி இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது .

 



 

தனக்குப் பணத்தேவை  ஏற்படும் போதெல்லாம் பல இலட்சங்கள் கண்ணனிடம் கடன் வாங்கிய எழிலரசன்,  கண்ணனுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை இன்னும் திருப்பி தர வேண்டி உள்ளதாகத் தெரிகிறது.  இரண்டு லட்ச ரூபாய் கேட்டு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததால், எழிலரசன் ஆற்காடு பகுதியில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாகக் கண்ணனிடம் இருந்து பணம் பறிக்கும் திட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பரத் என்பவருடன் இணைந்து சென்னையில் உள்ள அவரது நண்பரான மது என்பவரிடம் இது குறித்து ஆலோசனை கேட்டுள்ளார் .

 

 ஒரு கணிசமான தொகையைக் கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் தீட்டிய இந்த கும்பல், 58 வயதான வருமான வரித்துறை அதிகாரி ,  ஒரு பெண் உட்பட 6 பேர் ஆறு கொண்ட கும்பல் கண்ணனின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளது. திட்டப்படி சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் எழிலரசன் என்பவர்  ஆட்டோ கண்ணனின் வீட்டை நோட்டமிட்டு உள்ளார். அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராவில் அவனுடைய உருவம் பதிவாகி இருக்கிறது தொடர்ந்து மோசடி கும்பல் தாங்கள் வந்த வாகனத்தின் நம்பரை மாற்றி கண்ணன் வீட்டுக்கு வந்து பணத்தை அபகரித்துச் சென்றனர். 

 



 

இந்த கொள்ளை மிகவும் தத்ரூபமாக  இருக்கவேண்டும் என்பதற்காக  , சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் என்ற வருமானவரித் துறை அதிகாரியையும் இந்தக் கொள்ளையில்  இடம்பெறச் செய்துள்ளனர். இன்னும் ஓரிரு  ஆண்டுகளில் ஓய்வுபெற உள்ளதாகக் கூறப்படும் ராமகிருஷ்ணன் , எழிலரசன் பேச்சைக் கேட்டு ஒரு பெரிய தொகை சிக்கும் என்ற நினைப்போடு இவருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். எழிலரசன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட  பெண் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். சினிமா படபாணியில் நடத்தப்பட்ட இந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகள் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது