திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 24 மாணவிகள் உட்பட 68 மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்கி படிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிற்பகல்  3.45 மணி அளவில் 10 ஆம் வகுப்பு மாணவிகள் 3 நபர்கள் இயற்கை உபாதைக்காக பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கழிவறையில் உள்ள சிமெண்ட் ஜன்னல்களில் உள்ள துளைகளை பயன்படுத்தி அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் வினோத் (20), திருமலை (18), சுதேஷ் (16), கமலக்கண்ணன் (20), ஆகிய 4 மாணவர்களும் பள்ளி கழிவறையில் மாணவிகள் இயற்கை உபாதை கழிக்கும் போது அவர்கள் வைத்து இருந்த தொலைபேசியில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த மாணவிகள் உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் முத்து சரவணனிடம் புகார் அளித்துள்ளார். 



விரைந்து வந்த தலைமையாசிரியர் முத்துசரவணன் பள்ளி கழிவறையின் பின்புறம் ஒட்டி உள்ள புதரில் மறைந்திருந்த வினோத், திருமலை மற்றும்  சுதேஷ், கமலக்கண்ணன் ஆகிய நான்கு இளைஞர்களையும் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். எனவே, மாணவிகளின் கழிப்பறையை செல்போனில் அந்த வாலிபர்கள் படம் பிடித்திருக்கலாம். அப்போது, செல்போன் பிளாஸ் லைட் வெளிச்சம் வெளியாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் பிறகு  வீட்டிற்கு சென்ற பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றி புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் இருந்து கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று வெறையூர் காவல் துறையினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் புகார் கூறப்பட்ட 4 இளைஞர்களை நேரில் அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர்.




இதில் நான்கு மாணவர்களும் தவறை ஒப்புக் கொண்டதால் இவர்கள் நான்கு நபர்களையும் வெறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்த தொலைபேசிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர். அதில், பள்ளி கழிப்பறைகள் பதிவாகியுள்ளதா எனவும், காட்சி ஒருவேளை அந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்டதா அல்லது வேறு நபர்களுக்கு பரப்பப்பட்டதா என்ற விபரங்கள் சைபர் கிரைம் விசாரணையின் முடிவில் தெரியவரும் என காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவித்தனர். இயற்கை உபாதைக்கு கழிவறைக்கு சென்ற பள்ளி மாணவிகளுக்கு தொலைபேசியில் மறைந்திருந்த இளைஞர்கள் படம் எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.