திருப்பத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பலதரப்பட்ட பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடத்தில் வழங்கி வந்தனர். பரப்பபாக சென்று கொண்டிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தின் கவனத்தையும் இழுத்தது அங்கு 5 ஆம் வகுப்பு மாணவி செய்த ஒரு செயல். மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு பள்ளி சீருடையில் வந்த ஒரு பள்ளி சிறுமி, ஒரு பள்ளி சிறுவன் ஆகியோர் தங்களது கையில் "வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும்" என்ற பதாகையை கையில் ஏந்தியவாறு தனது தந்தையுடன் வந்து கோரிக்கை மனு அளிக்கும் இடத்தை வந்தடைந்தனர். 




இவர்களை அங்குள்ள பொது மக்கள் வியப்பாக பார்த்துக்கொண்டிருந்த நேரம் இருக்கையைவிட்டு எழுந்து அதிகாரிகளோடு அச்சிறுவர், சிறுமியை நோக்கி வந்த மாவட்ட ஆட்சியர் அமர குஹ்வாஷா அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். விசாரித்ததில், கோரிக்கை பதாகை மற்றும் மனுவோடு பள்ளி சீருடையில் வந்த மாணவர்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயிலும் சாதனா என்பது தெரியவந்தது. மேலும் பூங்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளதாகவும். இதில் சுமார் 190 மாணவ, மாணவிகள் வரை பயின்று வருகின்றனர்.


இந்த நிலையில் 9 ஆசிரியர் தேவைப்படும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும். அதிலும் ஒருவர் தலைமை ஆசிரியராக உள்ளார். எனவே 190 மாணவ, மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்களால் போதிய கல்வி போதிக்க முடியவில்லை எனவும் தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்கி கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்க தனது தந்தையின் உதவியோடு வந்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஆட்சியர் அமர குஷ்வாஹா பள்ளி சிறுமி சாதனாவிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து குறிப்பெடுத்துக்கொண்டார். மேலும் மாணவியின் கோரிக்கையை ஏற்ற அவர் மாலையே தங்கள் பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொள்வதாகவும் கூறினார். 




இது குறித்து 5-ம் வகுப்பு மாணவி சாதனா கூறுகையில், நான் பூங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கிறேன் எங்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களால் எல்லா வகுப்புக்கு சென்று பாடம் நடத்த முடியவில்லை. நாங்கள் சரியாக படிக்க முடியவில்லை. இதனால் "எங்களோட வருங்காலத்தை பற்றி யோசிக்க வேண்டி உள்ளது". எங்களுக்கு இன்னும் அதிகமா ஆசிரியர் வேணும். ஆசிரியர் இல்லனா எங்களால ஒருங்க படிக்க முடியாது எங்க படிப்பே கெட்டு போயிடும். அதனால மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு கொடுத்துள்ளோம் என்றார். 


இதனையடுத்து மாணவியின் மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் அமர குஷ்வாஹா மாணவிக்கு வாக்கு கொடுத்தபடி சற்றும் எதிர்பாராமல் மதியம் சுமார் 2.00 மணியளவில் மனு கொடுத்து சென்ற 5-ம் வகுப்பு மாணவி சாதனா பயிலும் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது பள்ளி வளாகம், கட்டிடங்கள், வகுப்பறைகள் என அனைத்தையும் ஆய்வு செய்துள்ளார். அப்போது முறையாக இல்லாத குடிநீர் குழாய், கழிவறை உள்ளிட்டவற்றை உடனே சரி செய்ய உத்தரவிட்டுள்ளார்.


பின்னர் மாணவர்கள் பயிலும் வகுப்பறைக்கு சென்ற அவர் நேரடியாக மாணவர்களிடம் அவர்களுக்கான குறைகளை கேட்டறிந்துள்ளார். மேலும் அவர்களின் கற்றல் திறனை பரிசோதித்தவர் மாணவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். இதை தொடர்ந்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் ஆட்சியரிடம், மழை காலத்தில் மழை தண்ணீர் வகுப்புக்கு வருவதாகவும், விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்க்கிறது, எங்களுக்கு டீச்சர் வேணும் போன்ற கோரிக்கைகளை கூறியுள்ளனர். இதன் அனைத்தையும் கேட்ட மாவட்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் உங்களுக்கான அனைத்தும் செய்து கொடுக்கிறேன். கூடுதல் ஆசிரியரும் நியமித்து கொடுக்கிறேன். நீங்க நன்றாக படிக்கிறிங்க எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஏன்னா நானும் அரசு பள்ளி மாணவன் தான், நான் தனியார் பள்ளியே பார்த்ததில்லை என கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். அதோடு மாணவர்கள் கூறிய அத்தனை குறைகளையும் உடனே நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 




5-ம் வகுப்பு மாணவி நேராக ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்ததும், அதற்கு மதிப்பளித்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.