சாத்தனூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 112.95 அடியை எட்டியது

கிருஷ்ணகிரி அணையிலிருந்து சாத்தனூர் அணைக்கு 4270 கன அடி தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் கிடு கிடு வென 112.95 அடியை எட்டியுள்ளது. இதனால் மூன்று மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Continues below advertisement

கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே 1956ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Continues below advertisement

 


 

கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு நேற்று 2360 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது. தற்போது காலை நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு வினாடிகு 4270 கன அடி வீதம் வந்து  கொண்டிருக்கிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களாக தண்ணீர் வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயராமல் இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நேற்று முன்தினம் முதல் அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 110 அடியாக இருந்தது. தற்போது காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 112.95 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கிருஷ்ணகிரி அணையிலிருந்து சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதே நிலையில் தொடர்ந்து தண்ணீர் வருகை தந்தால் இன்னும் ஓரிரு வாரத்தில் அணையின் முழு கொள்ளளவான 119 அடி எட்டி விடும். 

 


அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தென்பெண்ணை ஆற்று பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

Continues below advertisement