கந்திலி அருகே ஏலச் சீட்டு முன்விரோதம் காரணமாக  விசாரணைக்காக வந்த அக்கா மற்றும்  தம்பியை
  கந்திலி காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். மன உளைச்சலில்  பெண்  பூச்சிமருந்து அருந்தி  தற்கொலைக்கு  முயற்சி செய்த  சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இது தொடர்பாகத் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி கந்திலி காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர் .

 

திருப்பத்தூர் மாவட்டம் பெரியகண்ணாலப்பட்டி பகுதியை சேந்தவர் கிருஷ்ணன் விவசாயி இவருக்கு சங்கர் (வயது 33) என்ற மகனும்  சோனியா காந்தி (வயது 36) என்ற மகளும் உள்ளனர் . சில வருடங்களுக்கு முன்பு சோனியா காந்தி அதே பகுதியைச் சேர்ந்த  சரவணன் என்பவருடன் திருமணம் நடைபெற்று , குழந்தைகளுடன் பெரியகண்ணாலப்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர் . இந்நிலையில் சரவணன் அவரது நண்பர் சசிகுமார் என்பவருடன் சேர்ந்து  பெரியகண்ணாலப்பட்டி கிராமத்தில் 26 நபர்கள் அடங்கிய  ஏலச்  சீட்டு நடத்தி வந்துள்ளார். 

 



 

 கொரோனா நோய் முழு ஊரடங்கு  காரணமாகப்  பல மாதங்களாகச்  சீட்டில் அங்கம் வகிக்கும் யாரும் பணம் செலுத்த முடியாததால்,  ஏலச் சீட்டை நடத்தாமல் தற்காலிகமாக  நிறுத்திவைத்துள்ளார் , மேலும்  உள்ளூரில் வேலை கிடைக்காததால் தற்பொழுது பெங்களூரில் கூலி வேலை செய்து வருகின்றனர் சரவணன் இந்நிலையில் சரவணன் நண்பரான  சசிகுமார் ஏலச் சீட்டு நடத்தி சரவணன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி கந்திலி காவல் நிலையத்தில் சென்ற வாரம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் மீது விசாரணை மேற்கொள்ள, கந்திலி காவல் ஆய்வாளர் மணிமாறன் சரவணனின் மனைவி சோனியாவை  காவல்நிலையத்திற்கு வருமாறு தொலைபேசியில் தெரிவித்துள்ளார் .

 



 

தன்னுடைய கணவர் சரவணன் தற்பொழுது  பெங்களூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் , துணைக்குத் தனது  தம்பி சங்கருடன் நேற்று கந்திலி  காவல் நிலையத்திற்குச்  சென்றுள்ளார் சோனியா. அப்பொழுது கந்திலி காவல் ஆய்வாளர் மணிமாறன் சோனியாவின் சகோதரர்  சங்கரைத்  தகாத வார்த்தைகளில் திட்டி அவரை  கடுமையாகத் தாக்கியுள்ளார் . மேலும் சங்கரை அரை நிர்வாணத்துடன் அமரவைத்துத் துன்புறுத்தியுள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற சோனியாவையும்  ஆபாசமாகப் பேசி அடித்துள்ளார் .

 



 

இதனால் மனமுடைந்த சோனியா  காவல்நிலையத்தில் வெண்டைக்காய் செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் கழிவறைக்கு எடுத்துச்சென்று அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்குள் வந்த சோனியா அங்கேயே மயங்கி விழுந்தித்துள்ளார்  இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற காவலர்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் சோனியாவைப்  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆபத்தான கட்டத்திலுள்ளார் என்று தெரிவித்ததால் அவரை உடனடியாக  திருப்பத்தூர்  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர் . 

 

இந்நிலையில் காவல் ஆய்வாளர் மணிமாறன் காவல்நிலையத்தில் போலீசார் அடிக்கவில்லை எனவும் , சீட்டுப் பிரச்சினையால் தான் சோனியா காந்தி  விஷமருந்தி இந்த தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என்று கூறும்படி சோனியாவின் சகோதரர் சங்கரை மிரட்டியுள்ளார் . ஆனால் அவரது மிரட்டலுக்கு அஞ்சாமல் சங்கர்  கந்திலி காவல் ஆய்வாளர் மணிமாறன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பத்தூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  நேற்று மாலை புகார் அளித்துள்ளார் .

 



 

இந்த சம்பவம் தொடர்பாக ABP நாடு செய்திக்குழுமத்திடம் பேசிய திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி , இந்த சம்பவம் தொடர்பாக , கந்திலி காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறனை விசாரிக்க டிஎஸ்பி ஒருவரை நியமித்துள்ளதாகவும், அவரது விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்  தந்தை மகன் இருவரையும் போலீசார் காவல் நிலையத்தில் தாக்கி கொலை செய்த வழக்கு விசாரணை தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலையில், காவல் நிலையத்தில் ஆய்வாளர் தாக்கி துன்புறுத்தியதால் , பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை எழுப்பியுள்ளது .