திருப்பத்தூரில் விநாயகர் சதுர்த்தி  ஊர்வலம் நடத்த  அனுமதி கோரி நூதன முறையில் போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர்  மற்றும் மாவட்ட தலைவர்  தடுத்து நிறுத்தம்  . இதேபோல் ஆம்பூர் பைபாஸ் சாலையிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது  .

 

தமிழ் நாட்டில்  வரும் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு காரணமாக விநாயகர் சதுர்த்திக்குக் கோயில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடவும், ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழ் நாடு அரசு தடை பிறப்பித்துள்ளது.

 



 

ஆனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் நாடு முழுவதும் இந்து மக்கள் கட்சியினர் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .

 

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியினரின் போராட்டம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது . அதன் ஒரு பகுதியாக இன்று காலை  திருப்பத்தூர்  தூய நெஞ்சக் கல்லூரியிலிருந்து இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் செல்வம் மற்றும் மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகிய இருவரும்   தலையில் விநாயகர் சிலைகளை வைத்தவாறே  சாலைகளில் ஊர்வலமாக நடந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடிவு செய்தனர் . ஆனால் இது குறித்த தகவல் திருப்பத்தூர் நகரக் காவல் நிலைய காவல் துறை அதிகாரிகளுக்குத் தெரியவரவே இவர்கள் இருவரையும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர் .

 



 

இதனைத் தொடர்ந்து   அவர்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்ற  விநாயகர் சிலைகளை காவல் துறையினர் கைப்பற்றிப் பாதுகாப்பாகத்
  திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் இருவரையும் நகரக்  காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக  அழைத்துச் சென்றனர் .  இது குறித்த தகவல் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிய வருவே காவல் துறையினருக்கும்  இந்து மக்கள் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அதன் பின்பு போலீசார் இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் செல்வதை மட்டும்  மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து  விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்தொடர்பான  மனுவைக் கொடுக்க அனுமதி அளித்தனர் .

 

இதேபோல் ஆம்பூர் பைபாஸ் சாலையில் 20 கும் மேற்பட்ட  இந்து மக்கள் கட்சி உறுப்பினர்கள் , அவர்களது  மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தடை விதித்த தமிழ் நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர் .

 



 

இது தொடர்பாக ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் . " தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழ் நாடு அரசு கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ள மதுபான கடைகள் மற்றும் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்து , இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தடை விதித்தித்துள்ளது வருத்தத்திற்கும்  , கண்டனத்திற்குமான செயலாகும் . விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தமிழ் நாடு அரசு தடை உத்தரவை மறு பரிசீலனை செய்து புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது போல் தமிழ் நாட்டிலும் அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார் .