ஜோலார்பேட்டை அருகே நக்சலைட் நடத்திய குண்டு வெடிப்பில் உயிரிழந்த 4 காவலர்களுக்காக  , 41ஆம் ஆண்டு வீரவணக்கம் நினைவு அஞ்சலி திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில், உயிர் தியாகம் செய்த காவலர்களுக்காக  அமைக்கப்பட்ட நினைவுத்தூண் அருகே  நேற்று நடைபெற்றது.


நக்சலைட் நடத்திய குண்டு வெடிப்பு & வழக்கின் பின்னணி 


திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை அருகேயுள்ள வக்கணம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் இவர் மீது 11 கொலைவழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் , சிவலிங்கம் மற்றும்  அவரது 4  கூட்டாளிகள் பெருமாள் , ராஜப்பா , செல்வம் மற்றும் சின்னதம்பி ஆகிய  5 பேரை தேடப்படும் நக்சல் குற்றவாளிகளாக அறிவித்த காவல் துறையினர் , ஒரு இரட்டை கொலைவழக்கு  தொடர்பாக  ,  கடந்த 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 6 ஆம் தேதி  , திருப்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பழனிசாமி தலைமையிலான போலீசார் வக்கணம்பட்டி கிராமத்தில் இருந்து கைது செய்து , ஒரு அம்பாசடர் கார் மற்றும் ஒரு போலீஸ் வாகனத்தில்  திருப்பத்தூர் காவல் நிலையம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.




 


அப்பொழுது விடியற்காலை 5.30 மணிக்கு இவர்களது கார், சேலம் சாலையை நோக்கி சென்று கொண்டு இருந்த பொழுது, சிவலிங்கம் தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்து காரிலிருந்து அவரது கூட்டாளி சின்னதம்பியோடு லாவகமாக தப்பித்து தலைமறைவாகினார்.


இந்த சம்பவத்தில்  கார் மற்றும் போலீஸ் வாகனத்தில்  பயணம் செய்த  காவல்துறையை சார்ந்த ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகன் ஆகியோரும் , சிவலிங்கத்தின் கூட்டாளிகளான செல்வம் , ராஜப்பா மற்றும் பெருமாள் ஆகிய 7 பெரும்  சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் மாசிலாமணி மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகிய இரண்டு காவலர்களும் காயங்களுடன் உயிர் தப்பினர் .



 


'ஆபரேஷன் அஜந்தா' .



இதனை தொடர்ந்து வேலூரில் நடந்த ஆய்வாளர் பழனிச்சாமியின் இறுதி ஊர்வலத்தில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் நக்சலைட்டுகளை ஒழிக்க ஆய்வாளர் பழனிச்சாமியின் மகள் அஜந்தா பெயரில் ‘ஆபரேஷன் அஜந்தா’ தொடங்க உத்தரவிட்டார் இந்த நடவடிக்கை வால்டர் தேவாரம் தலைமையில் நடைபெற்று பல நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.


ஆய்வாளர் பழனிசாமி உற்பட 4 போலீசார் ,  சிவலிங்கத்தால் கொல்லப்பட்டதை தொடர்ந்து, CBCID போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில்  சிவலிங்கம் மற்றும் அவரது கூட்டாளி சின்னத்தம்பி ஆகியோர் கடந்த 2009ஆம் ஆண்டு திருவள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் .




 36 வருடங்களுக்கு பிறகு , கடந்த 2016 ஆம் ஆண்டில் , அப்பொழுது சிவலிங்கத்துக்கு 74  வயது இருக்கும் போது வேலூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் , சிவலிங்கத்துக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் வெடிகுண்டு பயன்படுத்திய குற்றத்துக்காக ஐந்து , 10 ஆண்டு கடுங்காவல் சிறை  தண்டையும் அளித்து தீர்ப்பு வழங்கியது .  பிறகு தான் நிரபராதி என்று , சிவலிங்கம் உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து , சில வருடங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார் .


உயிரிழந்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி .


இந்த நிலையில் ஆண்டு தோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த 4 காவல்துறை அதிகாரி மற்றும் காவலர்களுக்கு  ஆகஸ்ட் 6ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதியான நேற்று  திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 41ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது .


இதில் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார், வேலூர் சரக டிஐஜி பாபு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் காவல் அதிகாரிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.




மேலும் கடந்த 39 ஆண்டுகளாக நேரில் அஞ்சலி செலுத்தி வந்த முன்னாள் DGP வால்டர் தேவாரம் , கடந்த ஆண்டை  போலவே இந்த ஆண்டும்  காணொளி காட்சி வாயிலாக  இறந்த நான்கு காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.


காணொளி காட்சி வாயிலாக அவர் பேசுகையில்  இந்தியாவில் பல மாநிலங்களில் இன்றைக்கும்  நக்சலைட் ஊடுருவல் காணப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நக்சலைட் ஊடுருவல் இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கின்ற ஒன்றாக உள்ளது. இருப்பினும்  தமிழக காவல் துறையினர் மாநில எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப்பணியில் ஈடுபட வேண்டும். தமிழகத்தை எப்போதும் அமைதி பூங்காவாக வைத்திருக்க காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று பேசினார் .