வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவானி (27) இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்(29) என்பவரும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இதில் பவானி மற்றும் சரத்குமார் இருவரும் திருப்பூரில் பாவனி பனியன் கம்பெனியிலும், சரத்குமார் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளனர்.
இருவரும் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகிவந்துள்ளனர். இந்நிலையில் பவானி கர்ப்பமானதால் திருப்பூரில் இருந்து சொந்த ஊரான தாழம்பள்ளத்திற்கு வந்தால் உறவினர்களுக்கு தெரிந்து விடும் என்பதால் இருவரும் செங்கல்பட்டு, நெல்வாய் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பவானிக்கு கடந்த ஜனவரி மாதம் 16ந்தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருமணமாகாமல் குழந்தை பிறந்தால் நமது கிராமத்தில் தவறாக கூறுவார்கள், அதனால் குழந்தையை உறவினர் வீட்டில் கொடுத்து வைத்துவிடலாம் என கூறி அதன் பின்னர் முறைப்படி நாம் இருவரும் திருணம் செய்து கொள்ளலாம் என்று சரத்குமார் பவானிடம் கூறியுள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பாக உறவினருக்கு குழந்தையை கொடுத்ததாக பவானியை நம்ப வைத்து சரத்குமார் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் பவானியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறிவிட்டு திடீரென சரத்குமார் சென்னை திருப்போரூரை சேர்ந்த வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் பவானி தனது குழந்தையை தரும்படி சரத்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது குழந்தையை விற்பனை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பவானி வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் அன்று புகார் செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தனர்.
சரத்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர் அப்போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. தன்னுடைய குழந்தையை வந்தவாசி பெரிய காலனியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் கொடுத்து விற்பனை செய்ய கூறி கொடுத்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தார். இதனையடுத்து ஏழுமலையை கைது செய்து போலீசார் விசாரித்தனர், அதில் குழந்தையை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டதாக ஏழுமலை தெரிவித்துள்ளார்.
வந்தவாசி காவல்துறையினர் சென்னை சேர்ந்த மூன்று நபர்களையும் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த குழந்தையை அங்கிருந்து ஈரோடு பகுதியைச் சேர்ந்த நதியா, நந்தினி, ஜானகி, ஆகியோரிடம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்
அதைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையின் ஈரோடு சென்று ஈரோடு காவல்துறையினர் மூலம் குழந்தை வியாபாரியை கைது செய்தனர். ஆனால் அங்கு இருந்து குழந்தை கோபிசெட்டிபாளையம் பகுதிக்குச் சென்றுள்ளது. பின்னர் காவல்துறையினர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்தனர்.
அப்போது மூன்று நபர்களையும் விசாரணை செய்ததில் இவர்கள் மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. காவல்துறையினர் தொழிலதிபரிடம் தொடர்பு கொண்டு குழந்தையை ஒப்படைத்து விடுமாறு கூறியுள்ளனர். அதன்படி குழந்தை மும்பையில் இருந்து விமானத்தில் மூலம் சென்னை வந்தனர். பின்னர் காவல்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையுடன் பத்திரமும் ஒன்று வந்துள்ளது. அதனை படித்து பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தையின் பெற்றோர் இருவரும் விற்பனை செய்கிறோம் என பவானியின் கையெழுத்தும் போடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் தான் காவல்துறையினருக்கு குழந்தையை பவானியும் சேர்ந்து தான் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசாரிடம் குழந்தையை மீட்டு கொடுங்கள் என கூறி நாடகம் ஆடியது தெரியவந்தது.
இது குறித்து பவானியிடம் போலீசார் விசாரணை நடத்தினர், அதில் ''என்னுடைய குழந்தை கூட தேவையில்லை. எனக்கு என்னுடைய காதலன் தான் தேவை'' என கூறியிள்ளார். பின்னர் காதலுடன் சேர்ந்தே பவானியும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.