ஆரணியில் புற்று நோயால் கண் பார்வை இழந்து தவிக்கும் மூதாட்டியின் சொத்தை ஏமாற்றி அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மூதாட்டியை கருணை கொலை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்த சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கோட்டை கிழக்கு தெரு பெரியார் நகரை சேர்ந்த தர்மன் இவருடைய மனைவி சின்னகுழந்தை வயது (95). இவர்களுக்கு நடராஜன், ராஜேந்திரன் மற்றும் குமரேசன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் சில வருடங்களுக்கு முன்பு தர்மேந்திரன் உடல்நிலை குறைவால் உயிரிழந்து விட்டார். இதில் மூதாட்டி சின்னக்குழந்தை மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அதில் சில வருடங்களுக்கு முன்பு குமரேசன் மற்றும் நடராஜன் ஆகிய இரண்டு மகன்களும் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகன் ராஜேந்திரன் அரவணைப்பில் மூதாட்டி சின்னகுழந்தை வசித்து வருகிறார்.அதனைத்தொடர்ந்து மூதாட்டி சின்னகுழந்தைக்கு 2020-ஆம் ஆண்டு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் புற்றுநோய் கவனிக்காததால் மூதாட்டிக்கு இரண்டு கண்களும் பறிபோனது.


 




இதனால் கடந்த 2021-ம் ஆண்டு உயிரிழந்த நடராஜன் என்பவரின் மகனும் மூதாட்டி சின்னகுழந்தை பேரனாகிய கார்த்தி என்பவர் மூதாட்டிக்கு புற்று நோயால் இரண்டு கண் பார்வை இழந்துள்ளதை பயன்படுத்தி மூதாட்டி பெயரில் உள்ள வீட்டின் சொத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டு அந்த இடத்தை ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். சில மாதங்கள் கழித்து இதனை அறிந்த மூதாட்டி மகன் ராஜேந்திரன் மற்றும்  சின்னகுழந்தை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளார். ஆனால் அவர் அளித்த மனுவிற்கு இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.


 




இதுமட்டுமின்றி தற்போது மூதாட்டியை பராமரித்து வந்த ராஜேந்தினுக்கு போதிய வருமானம் இல்லை என்பதாலும், மூதாட்டி சின்னகுழந்தைக்கு வரும் முதியோர் உதவி தொகை வைத்து தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் பிழைப்பை நடத்தி வருகின்றனர். மேலும் புற்று நோயால் அவதிபட்டு வரும் நிலையில் தன்னுடைய சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிய பேரனிடமிருந்து சொத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் அவர்களும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினாலும் கண்பார்வை இழந்ததால் வாழ பிடிக்கவில்லை. இதனால் தன்னை கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியர் பா. முருகேசுக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ஆரணியில் புற்றுநோயால் கண்பார்வை இழந்த மூதாட்டியிடம் சொத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.