வேலூர் காகிதபட்டறையில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து கடந்த மாதம் இளம் சிறார் கைதிகள் தப்பியோடியது மற்றும் ரகளையில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், SP ராஜேஷ் கண்ணண் ஆகியோர் வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு பின்னர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் சிறார்கள் தப்பியோடிய விவகாரம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட Sp க்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெறப்பட்டது. இருந்த போதும் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, சிறார்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.
மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தவரை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கட்டமைப்பிலும் எந்தவித குறைபாடுகளும் இல்லை. அனைத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு கூர்நோக்கு இல்லத்தில் 30 சிறார்களுக்கு ஒரு ஆற்றுப்படுத்துனர் என்றும் அதற்கு மேல் இருந்தால் இரண்டு ஆற்றுப்படுத்துனர் (கவுன்சிலிங் கொடுப்பவர்) நியமிக்க வேண்டும். இங்கு 42 சிறார் கைதிகள் உள்ளனர் ஆனால் ஒரே ஒரு ஆற்றுப்படுத்தினர் உள்ளதால் கூடுதல் ஆற்றுப்படுத்தினர் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போல தற்போதைக்கு 150 கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்ய உள்ளோம். ஆய்வுக்குப் பிறகு கூர்நோக்கு இல்லத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை தேசிய ஆணைய தலைவருக்கு அறிக்கையாக அளிக்க உள்ளோம்.
வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் உள்ள சிறார்கள் முன்ஜாமின் வழங்காததன் அடிப்படையிலேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளது வேறு எந்த காரணமும் இல்லை. தப்பி சென்றவர்களில் ஒருவர் தவிர அனைவரும் பிடிபட்டுள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் திறம்படவே கையாண்டுள்ளது என கூறினார்.இங்கு பாதுகாப்பாளர்களாக உள்ளவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது குறித்து கேட்டதற்க்கு, அதற்க்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், அரசு பாதுகாப்பு இடத்தில் பணி செய்பவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒரு சிலர் விடுப்பிலும், ஒரு சிலர் பணியில் இருந்தும் நின்று விட்டனர். இந்நிலையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொண்டு தேர்வாகுபவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதோடு சேர்த்து இதற்கு முன்பாக பணி செய்து வருபவர்களும் நேர்காணலில் கலந்துகொண்டு தேர்வானால் அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய துறை இயக்குனரிடம் வலியுறுத்தப்படும் என கூறினார்.