திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு   கோடை விழாவை மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் துவக்கி வைத்தார். ஜமுனாமரத்தூரில் புதியதாக கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை மற்றும் அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சி, மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சியினை திறந்து வைத்து, விழாவில், 88,708 பயனாளிகளுக்கு ரூ.241 கோடியே 54 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். மேலும், ரூ.144 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 583 பணிகளை திறந்துவைத்தாா். இதுதவிர, ரூ.164 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிதாக 380 திட்டப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.


 




 


அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதிஸ்டாலின், 


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் நடைபெறும் கோடைவிழாவில் நான் பங்கேற்பதிலும், உங்களை காண்பதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜவ்வாதுமலையில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோடைவிழா இந்தாண்டு சிறப்பாக நடைபெறுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 68 சதவீகிதமாக இருந்த பழங்குடியினர்களின் இட ஒதுக்கீட்டை 69 சதவீகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பழங்குடியின மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்.


முத்தமிழ்ஞர் காலம்முதல் நம்முடைய முதல்வர் காலம் வரையில்  பழங்குடி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக செய்துள்ளது. முன்பு எல்லாம் பழங்குடி மக்கள் சாதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் நடையாக நடக்கவேண்டி இருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றபிறகு அனைத்து பழங்குடி மக்கள் அனைவருக்கும் சாதி சான்றிதழ் கிடைத்து வருகிறது, அந்தவகையில் கணிக்க இன சான்றிதழ் 1130 பயணாளிகளுக்கு வழங்கியுள்ளோம். இதே போன்று 2745 பேருக்கு ஒரே நாளில் நாம் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளோம். தற்போது ஜவ்வாது மலையில் உள்ள பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக கணினி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது


 




 


மலைபகுதிகளில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிகள் திறக்கப்படுவதின் மூலம் மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவலர்கள் உருவாக்கப்படுகிறார்கள். மலைக் கிராமங்களில் உண்டு, உறைவிடப் பள்ளிகளைத் திறந்தவா் கருணாநிதி. மலைவாழ் பழங்குடியின மக்களில் ஏராளமான வீரா், வீராங்கனைகள் உள்ளனா். அவா்களை அடையாளம் கண்டு உரிய வாய்ப்புகளை மாநில விளையாட்டுத்துறை நிச்சயம் பெற்றுத் தரும். ஜவ்வாது மலையில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.8 கோடியே 15 லட்சத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. செங்கம் வட்டம், பரமனந்தல் கிராமம் முதல் வேலூா் மாவட்டம், அமிா்தி வரை சுமாா் 67 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க ரூபாய்120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத் துறையிடம் அனுமதி பெற்று இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்படும்” என்றாா்.


இவ்விழாவில் மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சட்டப்பேரவை துனைத்தலைவர் கு.பிச்சாண்டி,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, ஆரணி எம்.கே.விஷ்ணுபிரசாத், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் , சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி சரவணன், மு.பெ.கிரி, அம்பேத்குமார், ஜோதி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.