வேலூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மாநகராட்சியில் என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தோம். பாதாள சாக்கடை திட்டங்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இன்னும் 29 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதள சாக்கடை அமைக்க வேண்டி உள்ளது. அதனை முடிக்க ஆணை வழங்கி நிதியும் தருவதாக கூறியுள்ளோம். குடிநீர் பிரச்னையை பொறுத்தவரைக்கும் மேல்நிலை தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் குழாய்களில் 69 இடங்களில் பழுது உள்ளது 19 இடங்களில் மட்டுமே முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.


 




மே மதம் 15 ஆம் தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு 60 எம் எல் டி குடிநீரை விநியோகிப்போம் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 22 - 23 ஆம் ஆண்டில் மாநகராட்சி சாலை அமைக்க ரூ.280 கோடி கொடுக்க உள்ளோம். பதினைந்தாவது நிதி குழுவில் 70 கோடியும், மூலதன மானிய திட்டத்தில் 25 கோடியும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10 கோடி என மொத்தம் 314 கோடி நிதியை இந்த ஆண்டு வேலூர் மாநகராட்சிக்கு வழங்க உள்ளோம். கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் வழங்க தயாராக உள்ளோம். அதே சமயம் மாநகராட்சி வரி வசூலை முறையாக வசூலிக்க உத்தரவிட்டுள்ளோம்.  ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் நிறைவடைந்துள்ளது மீதம் 9% பணிகள் நிலுவையில் உள்ளது. 963 கோடியில் 114 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு இதில் 91 பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது மீதமுள்ள 23 பணிகளை விரைவாக முடிக்க ஆலோசனை வழங்கியுள்ளோம். 


 





காவிரியை நீர் ஆதாரமாகக் கொண்டு இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூர், விழுப்புரத்தில் ஒரு பகுதியும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முழுவதுமாகவும் 14 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உள்ளோம். இதற்காக ஜய்காவில் கடன் பெற முயற்சித்து வருகிறோம். கடன் கிடைத்தவுடன் பணிகளை துவங்கி விடுவோம்” என கூறினார். மேலும் மருத்துவ கழிவுகள், மின்சாதன கழிவுகள் உள்ளிட்ட மாநகராட்சி கழிவுகளை பிரிக்க இடம் ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் அதனையும் நடைமுறைப்படுத்துவோம் என கூறினார்.


உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்