திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை பாசனத்தை நம்பி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. அதோடு திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பும், 105 ஏரிகளும் சாத்தனூர் அணையால் நேரடியாக பயன்பெறுகின்றன. இந்த நிலையில் கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை சராசரியை விட அதிகமாக பெய்தது. ஆனாலும், சாத்தனூர் அணையின் 20 அடி உயரம் கொண்ட மதகுகள் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அணையின் முழு கொள்ளளவு நீர் நிரப்ப முடியவில்லை. எனவே அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 119 அடியில் தற்போது 97.80 அடியும் மொத்த கொள்ளளவான 7321மில்லியன் கன அடியில் தற்போது 3441 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.



சாத்தனூர் அணையில் இருந்து நேரடி பாசனத்துக்கு இந்த ஆண்டும் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஏரி மற்றும் குளங்களில் நீர்வற்றி உள்ளது இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளதால் தமிழக அரசுக்கு 3 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு. சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு மே மாதம் 19ஆம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு அணையின் வலது, இடது புற கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. இதனால் சுமார் 7543 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் இடதுபுற கால்வாயில் 140 கன அடி வீதம் மற்றும் வலது புற கால்வாயில் 160 கன அடி வீதம் ஆக மொத்தம் 300 கன அடி வீதம்   45 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.



பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலது கால்வாயில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். சாத்தனூர் அணையின் முழு நீர்மட்டம் 119 அடி. அணையின் முழு கொள்ளளவு 7321 மில்லியன் கன அடி. சாத்தூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 97.50 அடி. தற்போதைய நீரின் அளவு 3399 மில்லியன் கனஅடியாக உள்ளது. மேலும் திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 5000 ஏக்கர் இரண்டாம் போக சாகுபடிக்கு 800 மில்லியன் கன அடி நீரை ஏப்ரல் 30க்குள் விவசாயிகள் கோரிக்கையின்படி தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.



வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி திமுக ஆட்சி என்றும் அதன் அடிப்படையில்தான் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் விவசாய பாசனத்திற்கு திறக்கப்பட்டு உள்ளதாகவும் விவசாயிகள் அனைவரும் இதனை முறையாக பயன்படுத்தி பாசன வசதி பெற்று கடைமடை விவசாயம் செய்யும் விவசாயிகள் வரை தண்ணீர் செல்ல ஒத்துழைப்பு நல்கி சிக்கனமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாத்தனூர் அணையை தூர்வார இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது என்றும் தீவிரமாக ஆய்வு செய்து பிறகே சாத்தனூர் அணையை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்தார்.